சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விழித்தெழுவோம்

வயது: 13 வயதிற்கு மேற்பட்டவர்கள்

பதிவிறக்கம் செய்ய – சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விழித்தெழுவோம்

காலம்: 20 நிமிடங்கள்

தகவல்கள்:Bakteen

இந்தப் பாடத்தில் நாம் எதைப் பற்றிப் பேசப்போகிறோம்?

காலநிலை மாற்றமும் சுற்றுச்சூழல் அழிவும் எமது வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்தப் பாடத்தின் மூலம் கற்றுக்கொள்வோம். அதிக வெப்பம், வெள்ளம், வறட்சி, மண்சரிவு, காடழிப்பு, உயிரியல் பன்முகத்தன்மை இழப்பு மற்றும் பிளாஸ்டிக் மாசுபாடு போன்ற பிரச்சினைகள் குறித்து எளிமையாகப் பேசுவோம்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குழந்தைகளின் அல்லது தனிநபர்களின் பொறுப்பு மட்டுமல்ல என்பதையும், பாடசாலைகள், சமூகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் ஆகியவையும் பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் கலந்துரையாடுவோம். பாடசாலையிலும் சமூகத்திலும் ஒன்றிணைந்து தங்களால் செய்யக்கூடிய செயல்களை அடையாளம் காண்பதற்கும் குழந்தைகளுக்கு வாய்ப்பளிப்போம்.

கற்றல் நோக்கங்கள்
  1. காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு பற்றிய அடிப்படைப் புரிதலைப் பெறுதல்.
  2. இலங்கையில் நாம் காணக்கூடிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அடையாளம் காணுதல்.
  3. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
  4. தனிப்பட்ட நடவடிக்கைகளுக்கும் கூட்டுச் செயல்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளுதல்.
  5. பாடசாலையிலும் சமூகத்திலும் மேற்கொள்ளக்கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அடையாளம் காணுதல்.
பாடத்திற்கு முன் தயாராகுவோம்

Bakteens கட்டுரையையும் அதிலுள்ள வினாடி வினாவையும் வாசித்துப் பாருங்கள். உங்கள் பகுதியில் இடம்பெறும் இரண்டு அல்லது மூன்று சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தெரிவுசெய்யுங்கள். உதாரணமாக, வெள்ளம், நீர்ப்பற்றாக்குறை, அதிக வெப்பம், பிளாஸ்டிக் கழிவுகள், காடுகளை வெட்டுதல் அல்லது வனவிலங்குகளின் வாழிடங்கள் இழக்கப்படுதல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

சுற்றுச்சூழலை அழிக்கும் நபர்கள் எனக் கருதி மாணவர்கள் மீது குற்றம் சுமத்துவதைத் தவிர்க்கவும். சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்படுவதற்குத் தனிநபர்களின் நடத்தைகள் மட்டுமன்றி, பெரிய வணிக நிறுவனங்கள், கொள்கைகள் மற்றும் வளங்கள் பயன்படுத்தப்படும் விதம் ஆகியவையும் காரணமாகின்றன என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.

தேவையான பொருட்கள்: திரையில் காண்பிக்கக்கூடிய அல்லது அச்சிடப்பட்ட Bakteens கட்டுரை, சிறிய அட்டைகள் அல்லது காகிதங்கள், பலகை மற்றும் பேனாக்கள்.

முக்கிய சொற்கள்: சுற்றுச்சூழல் (Environment), காலநிலை (Climate), காலநிலை மாற்றம் (Climate Change), காலநிலை அவசரநிலை (Climate Emergency), உயிரியல் பன்முகத்தன்மை (Biodiversity), காடழிப்பு (Deforestation), மாசுபாடு (Pollution), காலநிலை நீதி (Climate Justice).

ஆசிரியர்களுக்காக: வானிலை என்பது குறுகிய காலத்தில் மழை, வெப்பநிலை மற்றும் காற்று போன்ற நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கிறது. காலநிலை என்பது நீண்ட காலமாக ஒரு பகுதியில் நிலவும் பொதுவான வானிலை முறையைக் குறிக்கிறது.

நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் பசுமைக்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் சேர்வது காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணமாகும். காடழிப்பும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படும் சேதமும் இந்த நெருக்கடியை மேலும் தீவிரமாக்குகின்றன.

காலநிலை நெருக்கடி அனைவரையும் ஒரே விதமாகப் பாதிப்பதில்லை. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், விவசாய மற்றும் மீன்பிடிச் சமூகங்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், சிறுமிகள் மற்றும் சுகாதார சேவைகளை எளிதில் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் அதிக ஆபத்துக்கு உள்ளாகலாம்.

1. கலந்துரையாடலைத் தொடங்குவோம் – 2 நிமிடங்கள்

பலகையில் இவ்வாறு எழுதுங்கள்:

“எமது பகுதியில் சுற்றுச்சூழல் மாறிவருவதை நீங்கள் எவ்வாறு கவனிக்கிறீர்கள்?”

மாணவர்களிடமிருந்து இரண்டு அல்லது மூன்று கருத்துகளைக் கேட்டுக்கொள்ளுங்கள். பின்வரும் உதாரணங்களைப் பற்றி சிந்திக்குமாறு கூறுங்கள்:

  • முன்பைவிட அதிக வெப்பம்
  • மழை பெய்யும் முறைகளில் மாற்றங்கள்
  • வெள்ளம், வறட்சி அல்லது மண்சரிவு
  • மரங்களும் காடுகளும் குறைந்து வருதல்
  • பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் அதிகரித்தல்
  • விலங்குகளின் வாழிடங்கள் இழக்கப்படுதல்

பின்னர் இவ்வாறு கூறுங்கள்:

“நாம் சுற்றிலும் காணும் இந்த மாற்றங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. அவை எமது ஆரோக்கியம், உணவு, நீர், கல்வி மற்றும் எதிர்காலத்தைப் பாதிக்கின்றன.”

2. பிரச்சினையிலிருந்து நடவடிக்கைக்கு – 5 நிமிடங்கள்

பலகையை மூன்று பகுதிகளாகப் பிரியுங்கள்:

சுற்றுச்சூழல் பிரச்சினை → எமக்கு ஏற்படும் பாதிப்பு → நாம் செய்யக்கூடியவை

மாணவர்களைச் சிறிய குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பிரச்சினையை வழங்குங்கள்:

  • பிளாஸ்டிக் மாசுபாடு
  • காடழிப்பு
  • அதிக வெப்பம்
  • வெள்ளம் அல்லது வறட்சி
  • நீர் மாசுபடுதல்

அந்தப் பிரச்சினையால் மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஒரு பாதிப்பையும், அதற்குப் பதிலாக மேற்கொள்ளக்கூடிய ஒரு கூட்டுச் செயல்பாட்டையும் எழுதுமாறு கூறுங்கள்.

உதாரணம்:

பிளாஸ்டிக் மாசுபாடு → நீர்வழிகள் அடைபடுதல் மற்றும் விலங்குகளுக்குத் தீங்கு ஏற்படுதல் → பாடசாலையில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல்.

குழுக்களின் பதில்களைப் பலகையில் எழுதுங்கள். பின்னர் கேளுங்கள்:

“இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தனிநபர்கள் மட்டும் செயல்படுவது போதுமானதா? பாடசாலை, வணிக நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?”

3. உண்மையா, தவறான கருத்தா? – 4 நிமிடங்கள்

பின்வரும் வாக்கியங்களை ஒவ்வொன்றாக வாசியுங்கள். மாணவர்களிடம் “உண்மையா? தவறான கருத்தா? ஏன்?” என்று கேளுங்கள்.

“இன்று மழை பெய்வதால் காலநிலை மாற்றம் இல்லை.”

தவறான கருத்து. ஒரு நாளின் வானிலையை வைத்து நீண்டகால காலநிலை மாற்றங்களைத் தீர்மானிக்க முடியாது.

“சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மரங்களை நடுவது மட்டுமே போதுமானது.”

தவறான கருத்து. மரங்களை நடுவது முக்கியம். ஆனால் ஏற்கெனவே உள்ள காடுகளைப் பாதுகாத்தல், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் கொள்கைகளை மாற்றுதல் ஆகியவையும் அவசியம்.

“காலநிலை நெருக்கடி எமது ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.”

உண்மை. அதிக வெப்பம், மாசடைந்த காற்று, அசுத்தமான நீர், உணவுப்பற்றாக்குறை மற்றும் நோய்கள் பரவுதல் ஆகியவை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும்.

“சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் பொறுப்பு மட்டுமே.”

தவறான கருத்து. தனிநபர்களின் செயல்கள் முக்கியமானவை என்றாலும், அரசாங்கம், உள்ளூராட்சி அமைப்புகள், பாடசாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களும் பொறுப்பேற்று பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

இறுதியில் விளக்குங்கள்:

“காலநிலை நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தனிப்பட்ட நடவடிக்கைகளும், கூட்டுச் செயல்பாடுகளும், கொள்கை ரீதியான மாற்றங்களும் அவசியம்.”

4. Bakteens கட்டுரையை வாசிப்போம் – 3 நிமிடங்கள்

கட்டுரையில் பின்வரும் விடயங்கள் இடம்பெறும் பகுதிகளைக் காண்பியுங்கள்:

  • காலநிலை மாற்றம் என்றால் என்ன?
  • இலங்கையில் ஏற்படும் பாதிப்புகள்
  • காலநிலை நெருக்கடி எமது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் விதம்
  • இளைஞர்கள் செய்யக்கூடியவை
  • பெரியவர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திடம் கோர வேண்டியவை

கட்டுரையின் ஒரு பகுதியை வாசித்த பின்னர் கேளுங்கள்:

“நீங்கள் தனியாகச் செய்யக்கூடிய ஒரு செயலும், பாடசாலையுடன் இணைந்து செய்யக்கூடிய ஒரு செயலும் என்ன?”

தேவைப்பட்டால், இந்தப் பதிலைக் கூறி உதவுங்கள்:

“தனியாக இருக்கும்போது தேவையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கலாம். பாடசாலையுடன் இணைந்து குப்பைகளைப் பிரிக்கும் முறையை அல்லது பாடசாலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கலாம்.”

5. இப்போது வினாடி வினாவைச் செய்வோம் – 4 நிமிடங்கள்

Bakteens கட்டுரையிலுள்ள வினாடி வினாவிலிருந்து இந்தப் பாடத்திற்குப் பொருத்தமான கேள்விகளைத் தெரிவுசெய்து வகுப்பாகச் செய்யுங்கள். ஒவ்வொரு பதிலுக்குப் பின்னரும் கேளுங்கள்:

“நீங்கள் ஏன் அந்தப் பதிலைத் தெரிவுசெய்தீர்கள்?”

பின்னர் இரண்டு சுருக்கமான வாய்மொழிக் கேள்விகளைக் கேளுங்கள்:

வானிலைக்கும் காலநிலைக்கும் இடையிலான வேறுபாடு என்ன?

பதில்: வானிலை என்பது குறுகிய கால நிலைமையாகும். காலநிலை என்பது நீண்ட காலமாக நிலவும் பொதுவான வானிலை முறையாகும்.

பாடசாலையில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய ஒரு கூட்டுச் செயல்பாடு என்ன?

பதில்கள்: குப்பைகளைப் பிரித்தல், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைக் குறைத்தல், நீரையும் மின்சாரத்தையும் வீணாக்காமல் இருத்தல், உள்ளூர் தாவரங்களை நடுதல் அல்லது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கத்தை ஏற்பாடு செய்தல்.

6. இறுதிச் செய்தி – 2 நிமிடங்கள்

மாணவர்களிடம் கேளுங்கள்:

“சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக இந்த வாரம் எமது வகுப்பு ஒன்றிணைந்து செய்யக்கூடிய ஒரு செயல் என்ன?”

சில பதில்களைக் கேட்ட பின்னர் இவ்வாறு கூறி முடிக்கவும்:

“காலநிலை நெருக்கடி என்பது எதிர்காலத்தில் மட்டும் ஏற்படப்போகும் ஒரு விடயம் அல்ல. அது இன்று எமது நீர், உணவு, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையைப் பாதிக்கிறது. தனிநபர்களின் சிறிய செயல்கள் முக்கியமானவை. ஆனால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாம் பாடசாலையாகவும், சமூகமாகவும், நாடாகவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆரோக்கியமான சுற்றுச்சூழலில் வாழ்வது ஒவ்வொருவரினதும் உரிமையாகும்.”

ஆசிரியர்களுக்கு ஒரு சிறிய நினைவூட்டல்

கேள்வி → பிரச்சினையையும் அதன் தாக்கத்தையும் அடையாளம் காணுதல் → தவறான கருத்துகள் பற்றிய கலந்துரையாடல் → கட்டுரை → வினாடி வினா

காலநிலை நெருக்கடி பற்றிப் பேசும்போது குழந்தைகளிடம் அச்சத்தையும் உதவியற்ற உணர்வையும் மட்டும் ஏற்படுத்த வேண்டாம். பிரச்சினையின் தீவிரத்தைத் தெளிவுபடுத்துவதோடு, அவர்களால் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய வழிகளையும் எடுத்துக்காட்டுங்கள்.

சுற்றுச்சூழல் அழிவுக்கான முழுப் பொறுப்பையும் குழந்தைகளின் தனிப்பட்ட நடத்தைகளின் மீது சுமத்த வேண்டாம். பெரிய வணிக நிறுவனங்கள், அரசாங்கக் கொள்கைகள், எரிசக்திப் பயன்பாடு மற்றும் வளங்களைப் பகிர்ந்தளித்தல் குறித்தும் எளிமையாகப் பேசுங்கள்.

பாடத்திற்குப் பின்னர் மாணவர்கள் பின்வரும் செயல்பாடுகளில் ஒன்றை ஏற்பாடு செய்யலாம்:

  • பாடசாலையில் பயன்படுத்தப்படும் ஒருமுறைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து ஒரு எளிய கணக்கெடுப்பு நடத்துதல்.
  • குப்பைகளைப் பிரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்துதல்.
  • “எமது பாடசாலையின் காலநிலை நடவடிக்கைகள்” என்ற தலைப்பில் சுவரொட்டிப் பிரசாரத்தை நடத்துதல்.
  • பாடசாலையில் நீர் அல்லது மின்சாரம் வீணாகும் இடங்களை அடையாளம் கண்டு தீர்வுகளை முன்வைத்தல்.
  • அப்பகுதிக்குப் பொருத்தமான உள்ளூர் மரங்களையும் தாவரங்களையும் நட்டு, அவற்றை நீண்டகாலம் பராமரித்தல்.

பாடசாலை நிர்வாகத்திடம் சுற்றுச்சூழல் தொடர்பான கோரிக்கைகளை உள்ளடக்கிய மாணவர்களின் கடிதத்தைத் தயாரித்தல்

  1. மரம் நடுவதை ஒரு நாள் புகைப்பட நிகழ்வாக மட்டும் மட்டுப்படுத்த வேண்டாம். நடப்பட்ட தாவரங்களுக்கு நீர் வழங்குதல், அவற்றைப் பாதுகாத்தல் மற்றும் அவை வளர்கின்றனவா என்பதைத் தொடர்ந்து கண்காணித்தல் ஆகியவற்றுக்கான பொறுப்புகளைப் பகிர்ந்தளியுங்கள்.

பாதுகாப்பான வகுப்பறையை உருவாக்குவோம்

  • வெள்ளம், மண்சரிவு, வறட்சி அல்லது வேறு ஏதேனும் அனர்த்தத்தை எதிர்கொண்ட குழந்தைகள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம்.
  • மாணவர்களின் குடும்ப வாழ்க்கை முறை, வருமானம் அல்லது தொழில் காரணமாக அவர்களைக் குற்றம் சாட்ட வேண்டாம்.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளை எல்லாக் குடும்பங்களாலும் ஒரே விதமாகப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
  • குழந்தைகள் முன்வைக்கும் கருத்துகளைக் கேலி செய்யாமல், அவற்றை நடைமுறைச் செயல்களாக மாற்றுவதற்கு ஆதரவளியுங்கள்.
  • காலநிலை நெருக்கடி குறித்து அச்சம் அல்லது கடுமையான கவலை ஏற்படுவதாக ஒரு குழந்தை கூறினால், அதைப் புறக்கணிக்காமல் அமைதியாகக் கேட்டு ஆதரவளியுங்கள்.

 

This resource has been developed based on the Age-Appropriate Sexuality Education, Communication Guideline for Sri Lanka.

Key Concept 7: Sexuality and Reproductive Health

https://srilanka.unfpa.org/sites/default/files/pub-pdf/2date26-date7/Age-Appropriate%20Sexuality%20Education%2C%20Communication%20Guideline%20for%20Sri%20Lanka.pdf