சமூகப் பாலினத்தைப் புரிந்துகொள்வோம்

“ஆண் பிள்ளைகள் அழுவதில்லை.”

“பெண் பிள்ளைகள் ஒழுங்காக உட்கார வேண்டும்.”

“வீட்டு வேலைகள் பெண் பிள்ளைகளுக்கானவை.”

“ஒரு குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியது ஆண்தான்.”

“பெண் பிள்ளைகள் இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே இருக்கக்கூடாது.”

“ஒரு ஆண் பிள்ளை இவ்வளவு பயப்படக்கூடாது.”

இவ்வாறான பல செய்திகளை நாம் சிறு வயதிலிருந்தே கேட்டு வருகிறோம். இவை குடும்பம், பாடசாலை, மத வழிபாட்டுத் தலங்கள், ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து நமக்குக் கிடைக்கின்றன.

இவற்றை அடிக்கடி கேட்பதால், இவை இயற்கையான விதிகள் போன்று தோன்றலாம். ஆனால், இவற்றில் பெரும்பாலான கருத்துகள் உடல் அல்லது உயிரியல் சார்ந்தவை அல்ல. இவை சமூகத்தால் நீண்ட காலமாக உருவாக்கப்பட்டு வந்த சமூகப் பாலின எதிர்பார்ப்புகளாகும்.

பாலினம் (Sex) மற்றும் சமூகப் பாலினம் (Gender)  இரண்டும் வேறுப்பட்டவை

பாலினம் (Sex) என்பது உடலுடன் தொடர்புடைய உயிரியல் பண்புகளைக் குறிக்கிறது. பாலியல் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள், ஹோர்மோன்கள் மற்றும் குரோமோசோம்கள் ஆகியவை இதில் அடங்குகின்றன.

ஒரு குழந்தை பிறக்கும்போது, பொதுவாக அதன் பாலியல் உறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு பெண் அல்லது ஆண் என பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், அனைத்து மனித உடல்களும் பெண் அல்லது ஆண் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் முழுமையாகப் பொருந்துவதில்லை.

சிலர் பொதுவாக பெண் அல்லது ஆண் எனக் கருதப்படும் பண்புகளிலிருந்து வேறுபட்ட உடல் பண்புகள், ஹோர்மோன்கள் அல்லது குரோமோசோம்களுடன் பிறக்கின்றனர். இவர்கள் இருபாலினப் பண்புகளைக் கொண்டவர்கள் (Intersex) என அழைக்கப்படுகின்றனர். இது மனித உடல்களில் காணப்படும் இயற்கையான பல்வகைத் தன்மையின் ஒரு பகுதியாகும்.

சமூகப் பாலினம் (Gender) என்பது பெண்களும் ஆண்களும் எவ்வாறு தோற்றமளிக்க வேண்டும், எவ்வாறு ஆடை அணிய வேண்டும், எவ்வாறு பேச வேண்டும் மற்றும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பாக சமூகத்தால் உருவாக்கப்பட்டுள்ள கருத்துகள் மற்றும் விதிகளைக் குறிக்கிறது.

பாலினம் உடலுடன் தொடர்புடையது. ஆனால், “பெண் பிள்ளைகள் சத்தமாகப் பேசக்கூடாது” அல்லது “ஆண் பிள்ளைகள் அழக்கூடாது” போன்ற கருத்துகள் உயிரியல் விதிகள் அல்ல.

சமூகப் பாலினம் நமது வாழ்க்கைக்குள் எவ்வாறு வருகிறது?

ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே, இளஞ்சிவப்பு நிறம் பெண் குழந்தைகளுக்கும் நீல நிறம் ஆண் குழந்தைகளுக்கும் எனப் பிரிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு பொம்மைகள் மற்றும் சமையலறை விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆண் குழந்தைகளுக்கு வாகனங்கள், துப்பாக்கிகள் மற்றும் கட்டுமான விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதன் மூலம் பெண் குழந்தைகள் பிறரைப் பராமரிப்பதற்கும், ஆண் குழந்தைகள் சுறுசுறுப்பாகவும் வலிமையானவர்களாகவும் இருப்பதற்கும் தயார்படுத்தப்படுகின்றனர்.

ஒரு விளையாட்டுப் பொருளுக்கு பெண் அல்லது ஆண் தன்மை கிடையாது. ஒரு நிறத்திற்கும் சமூகப் பாலினம் கிடையாது. ஒரு குழந்தை விரும்பும் விடயம் அதன் திறமை, பாலினம் அல்லது மதிப்பைத் தீர்மானிப்பதில்லை.

வீட்டில்

சில குடும்பங்களில் பெண் குழந்தையிடம் சமைக்கவும், வீட்டைச் சுத்தம் செய்யவும், விருந்தினர்களுக்குத் தேநீர் வழங்கவும், இளைய குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவும் கூறப்படலாம். அதே நேரத்தில், அவளது சகோதரனுக்கு விளையாடவோ தொலைபேசியைப் பயன்படுத்தவோ சுதந்திரம் வழங்கப்படலாம்.

ஆண் குழந்தைக்கும் வேறுவிதமான சுமைகள் வழங்கப்படுகின்றன. அவன் வலிமையாக இருக்க வேண்டும், நன்றாகப் பணம் சம்பாதித்து குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும், எந்தவொரு பலவீனத்தையும் வெளிப்படுத்தக்கூடாது என்று கற்பிக்கப்படுகிறான்.

இந்த இரு வகையான எதிர்பார்ப்புகளும் குழந்தைகளின் சுதந்திரத்தை மட்டுப்படுத்துகின்றன.

வீட்டு வேலைகளைச் செய்வது பெண் குழந்தைகளின் இயற்கையான பொறுப்பு அல்ல. பணம் சம்பாதிப்பது ஆண் குழந்தைகளின் மட்டும் பொறுப்பும் அல்ல.

ஒவ்வொரு குழந்தையும் சமைத்தல், சுத்தம் செய்தல், பணத்தை நிர்வகித்தல், பிறரைப் பராமரித்தல் மற்றும் சுயாதீனமாக வாழ்தல் போன்ற திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பாடசாலையில்

சமூகப் பாலினம் தொடர்பான கருத்துகள் குழந்தைகளின் கல்வியையும் பாதிக்கின்றன.

ஆண் பிள்ளைகள் விஞ்ஞானம், தொழில்நுட்பம், கணிதம், விளையாட்டு மற்றும் தலைமைத்துவத்தில் திறமையானவர்கள் என்று கருதப்படலாம். பெண் பிள்ளைகள் மொழிகள், கலைகள் மற்றும் பிறரைப் பராமரிக்கும் தொழில்களுக்கு ஏற்றவர்கள் என்று கூறப்படலாம்.

தன்னம்பிக்கையுடன் பேசும் ஆண் பிள்ளை “தலைவர்” என அழைக்கப்படலாம். அதேபோன்று பேசும் பெண் பிள்ளை “அதிகம் பேசுபவர்” அல்லது “எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முயற்சிப்பவர்” எனக் குறிப்பிடப்படலாம்.

மென்மையாகப் பேசும் அல்லது நடனத்தில் ஆர்வம் கொண்ட ஆண் பிள்ளையை கேலி செய்யலாம். கிரிக்கெட் விளையாடும் அல்லது குட்டையான தலைமுடியை விரும்பும் பெண் பிள்ளையை “ஆண் பிள்ளையைப் போல” என்று கூறலாம்.

ஒரு பாடம், விளையாட்டு அல்லது தொழில் ஒரு குறிப்பிட்ட சமூகப் பாலினத்திற்குச் சொந்தமானது அல்ல.

ஒரு பெண் பிள்ளை பொறியியலாளராகவும், சாரதியாகவும் அல்லது கிரிக்கெட் வீராங்கனையாகவும் ஆகலாம். ஓர் ஆண் பிள்ளை தாதியராகவும், நடனக் கலைஞராகவும் அல்லது குழந்தைகளைப் பராமரிக்கும் ஆசிரியராகவும் ஆகலாம்.

சுதந்திரமும் பாதுகாப்பும்

பெண் பிள்ளைகளுக்கு ஆண் பிள்ளைகளைவிட குறைவான சுதந்திரம் வழங்கப்படுவது பல நேரங்களில் “பாதுகாப்பு” என்று அழைக்கப்படுகிறது.

ஒரு பெண் பிள்ளை தனியாகப் பயணம் செய்வதற்கும், நண்பர்களைச் சந்திப்பதற்கும் அல்லது இரவு நேரம் வரை வெளியே இருப்பதற்கும் அனுமதிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால், அவளது சகோதரனுக்கு அதே சுதந்திரம் வழங்கப்படலாம்.

பெண் பிள்ளைகள் எதிர்கொள்ளும் வன்முறை ஒரு உண்மையான பிரச்சினையாகும். ஆனால் அதற்கான தீர்வு பெண் பிள்ளைகளின் உலகத்தைச் சுருக்குவது அல்ல.

பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பிக்க வேண்டும். அதேவேளை, பொது இடங்களைப் பாதுகாப்பானதாக மாற்றுவதும், வன்முறையில் ஈடுபடுபவர்களைப் பொறுப்புக்கூறச் செய்வதும் அவசியமாகும்.

சமூக ஊடகங்களில்

பழைய சமூகப் பாலினக் கருத்துகள் புதிய தொழில்நுட்பங்களுக்குள்ளும் காணப்படுகின்றன.

பெண் பிள்ளைகளிடம்:

  • புகைப்படங்களைப் பதிவிடாதே.
  • அறிமுகமில்லாதவர்களுடன் பேசாதே.
  • அதிகமாகக் கருத்துத் தெரிவிக்காதே.
  • அதிக கவனத்தை ஈர்க்கும் வகையில் நடந்துகொள்ளாதே.
  • ஏதாவது நடந்தால், “நீ இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்” என்று கூறலாம்.

ஆண் பிள்ளைகளிடம்:

  • முதலில் நீயே பேச வேண்டும்.
  • ஒரு பெண் “வேண்டாம்” என்று கூறினாலும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
  • பாலியல் அனுபவங்கள் இருப்பதை வெளிப்படுத்த வேண்டும்.
  • பெண் பிள்ளைகளின் புகைப்படங்களைப் பற்றி பேசலாம் அல்லது அவற்றை நண்பர்களுடன் பகிரலாம்.
  • தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டாலும் அதைப் பற்றி பேசக்கூடாது.

இவ்வாறான செய்திகள் இரு தரப்பினருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியவை.

மாதவிடாய் மற்றும் சமூகப் பாலினக் கருத்துகள்

மாதவிடாய் என்பது உடலில் நடைபெறும் ஒரு உயிரியல் செயல்முறையாகும். ஆனால், அதைச் சுற்றி காணப்படும் பல கட்டுப்பாடுகள் சமூகத்தால் உருவாக்கப்பட்டவையாகும்.

மாதவிடாய் ஏற்படும் பெண் பிள்ளையிடம்:

  • சமையலறைக்குச் செல்லக்கூடாது.
  • மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லக்கூடாது.
  • சில உணவுகளைத் தொடவோ சாப்பிடவோ கூடாது.
  • தலைமுடியைக் கழுவக்கூடாது.
  • விளையாடக்கூடாது.
  • ஆண்களுக்கு முன்பாக மாதவிடாய் குறித்து பேசக்கூடாது.
  • சுகாதாரப் பொருட்களை மறைத்து எடுத்துச் செல்ல வேண்டும்.
  • இப்போது “நல்ல இளம் பெண்ணைப் போல” நடந்துகொள்ள வேண்டும்.

என்று அறிவுறுத்தப்படலாம்.

மாதவிடாய் ஏற்படுவதால் ஒருவர் அசுத்தமானவராகவோ தூய்மையற்றவராகவோ மாறுவதில்லை. மாதவிடாய் நாட்களில் குளிக்கவும், தலைமுடியைக் கழுவவும், சத்தான உணவுகளை உண்ணவும், வசதியாக இருந்தால் உடற்பயிற்சி செய்யவும், பாடசாலைக்குச் செல்லவும் மற்றும் வழக்கமான செயற்பாடுகளில் ஈடுபடவும் முடியும்.

முதல் மாதவிடாய் ஏற்படுவது பெண் குழந்தையின் ஆடை, நடமாட்டம், நட்புறவுகள் மற்றும் சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்கான காரணமாக இருக்கக்கூடாது.

ஆண் பிள்ளைகளும் மாதவிடாய் குறித்து கற்றுக்கொள்ள வேண்டும். அது பெண் பிள்ளைகளுக்கு மட்டும் உரிய இரகசியம் அல்ல.

சமூகப் பாலினம் – சுருக்கமாகப் பார்ப்போம்

சமூகப் பாலினம் என்பது சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒதுக்கப்படும் பாத்திரங்கள் தொடர்பாக சமூகத்தால் உருவாக்கப்பட்டுள்ள கருத்துகளைக் குறிக்கிறது. சமூகப் பாலினப் பாத்திரங்கள் நாம் கற்றுக்கொள்பவையாகும். அவற்றுடன் நாம் பிறப்பதில்லை.

சமூக நெறிமுறை (Social Norm) என்பது ஒரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் நடத்தை அல்லது ஒருவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பான கருத்தாகும்.

உதாரணமாக, ஆண்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடாது என்ற கருத்து, “ஆண்கள் அழுவதில்லை” என்ற சமூக நெறிமுறையின் மூலம் வெளிப்படுகிறது.

ஒரு நெறிமுறை சமூகப் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால், அது சமூகப் பாலின நெறிமுறை (Gender Norm) என அழைக்கப்படுகிறது.

“குடும்பத்திற்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டியது ஆண்”, “உடல் வலிமை தேவைப்படும் வீட்டு வேலைகளை ஆணே செய்ய வேண்டும்” மற்றும் “சமையல், சுத்தம் செய்தல் போன்ற வீட்டு வேலைகளைப் பெண்களே செய்ய வேண்டும்” போன்ற கருத்துகள் சமூகப் பாலின நெறிமுறைகளுக்கான உதாரணங்களாகும்.

பல சமூகப் பாலின நெறிமுறைகள் ஒன்றிணைந்து சமூகப் பாலினப் பாத்திரத்தை (Gender Role) உருவாக்குகின்றன. எனவே, சமூகப் பாலினப் பாத்திரம் என்பது பொதுவாக ஆண்களுக்கோ பெண்களுக்கோ ஒதுக்கப்படும் நடத்தைகள் மற்றும் பொறுப்புகளின் தொகுப்பாகும்.

சமூகப் பாலினத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் இடையிலான தொடர்பு

பெண்களும் ஆண்களும் எவ்வாறு தோற்றமளிக்க வேண்டும், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சமூகத்தால் உருவாக்கப்படும் கருத்துகள் சமூகப் பாலினக் கட்டமைப்புகள் எனப்படுகின்றன.

இத்தகைய கருத்துகள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வெவ்வேறு பொறுப்புகள், சுதந்திரம் மற்றும் அதிகாரத்தை வழங்குகின்றன.

ஆண்களுக்கு அதிக அதிகாரம், சுதந்திரம் மற்றும் முடிவெடுக்கும் வாய்ப்புகளை வழங்கி, பெண்களின் சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் கட்டுப்படுத்தும் சமூக அமைப்பு ஆணாதிக்கம் (Patriarchy) எனப்படுகிறது.

எனவே, சமூகப் பாலினக் கட்டமைப்புகள் ஆணாதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கு உதவுகின்றன.

குடும்பம், பாடசாலை, மத வழிபாட்டுத் தலங்கள், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக இக்கருத்துகள் மீண்டும் மீண்டும் கற்பிக்கப்படும்போது, அவை சாதாரணமான மற்றும் இயற்கையான விதிகள் போன்று தோன்றலாம்.

ஆனால், இவை மாற்ற முடியாத விதிகள் அல்ல.

வீட்டு வேலைகளை சமமாகப் பகிர்ந்துகொள்வது, ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான சுதந்திரத்தை வழங்குவது, உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிப்பது மற்றும் அனைவருக்கும் தலைமைத்துவ வாய்ப்புகளை வழங்குவது போன்றவற்றின் மூலம் தீங்கு விளைவிக்கும் சமூகப் பாலினக் கருத்துகளையும் ஆணாதிக்கத்தையும் மாற்ற முடியும்.

சமூகப் பாலினக் கட்டமைப்புகளால் ஏற்படும் அநீதி

பெண் பிள்ளைகள் அழுவதற்கு அனுமதித்தாலும், அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தும்போது அது பொருத்தமற்ற “மோசமான” நடத்தை என்று கூறப்படலாம். ஆண் பிள்ளைகள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டாலும், அவர்கள் அழும்போது அது ஆண்களுக்கு பொருந்தாத “பலவீனமான” நடத்தை என்று கூறப்படலாம்.

இதன் காரணமாக பெண் பிள்ளைகள் தங்களுக்கு இயல்பாக ஏற்படும் கோபத்தை மறைத்துக்கொள்ளக் கற்றுக்கொள்ளலாம். ஆண் பிள்ளைகள் தங்களுடைய துக்கம் அல்லது பயம் போன்ற உணர்வுகளை கோபம் மற்றும் வன்முறை மூலம் வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படலாம்.

துக்கம், கோபம், பயம், மகிழ்ச்சி மற்றும் அன்பு ஆகிய உணர்வுகள் ஒவ்வொரு மனிதருக்கும் ஏற்படுகின்றன. உணர்வுகளுக்கு சமூகப் பாலினம் கிடையாது.

வலிமையாக இருப்பது என்பது எதையும் உணராதவர் போல் இருப்பதல்ல. உதவி கேட்பது, மன்னிப்புக் கேட்பது மற்றும் உணர்வுகளைப் பற்றி நேர்மையாகப் பேசுவதும் வலிமையின் அடையாளங்களாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தோற்றமும் உடலும்

பெண் பிள்ளைகள் மெலிந்த, வெளிர் நிறமுடைய, அழகான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆண் பிள்ளைகள் உயரமாகவும் வலிமையாகவும் தசைகள் கொண்ட உடலமைப்புடனும் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்படும் வடிகட்டிகள் (Filters), செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மாற்றப்பட்ட புகைப்படங்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் (Influencers) மற்றும் விளம்பரங்கள் இந்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கின்றன.

ஆனால் மனித உடல்கள் பல்வேறு வடிவங்களிலும் தோற்றங்களிலும் உள்ளன. தோலின் நிறம், உயரம், உடல் எடை, முகத்தின் வடிவம் அல்லது உடலின் வேறு எந்தப் பண்பும் ஒருவரின் மதிப்பைத் தீர்மானிப்பதில்லை.

காதல் உறவுகளும் பாலியல் தொடர்பான கருத்துகளும்

ஆண் பிள்ளைகள் ஒரு உறவைத் தொடங்க வேண்டும், தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் மற்றும் பாலியல் அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.

பெண் பிள்ளைகள் கவர்ச்சியாக இருக்க வேண்டும், ஆனால் பாலியல் தொடர்பான விருப்பத்தை வெளிப்படுத்தக்கூடாது என்று கூறப்படலாம். அவர்களின் மதிப்பு கன்னித்தன்மை, கீழ்ப்படிதல் மற்றும் குடும்பத்தின் கௌரவத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

இவ்விரு கருத்துகளும் சாதாரணம் அற்றவை.

ஆரோக்கியமான உறவில்:

  • எந்தவொரு நபரும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தலாம்.
  • எந்தவொரு நபரும் “வேண்டாம்” என்று கூறலாம்.
  • இருவரும் தங்களுடைய எல்லைகளைத் தீர்மானிக்கலாம்.
  • அன்பை நிரூபிப்பதற்காக பாலியல் உறவில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை.
  • மற்றொருவரின் உடல் மீது வேறு யாருக்கும் உரிமை இல்லை.
  • பாதுகாப்பான பாலியல் நடத்தைக்கான பொறுப்பு இருவருக்கும் உள்ளது.
  • இருவருக்கும் அந்த உறவிலிருந்து விலகுவதற்கான சுதந்திரம் இருக்க வேண்டும்.

சமூகப் பாலின அடையாளம்

சமூகப் பாலின அடையாளம் (Gender Identity) என்பது ஒருவர் தன்னுடைய சமூகப் பாலினத்தை உள்ளார்ந்த முறையில் எவ்வாறு அடையாளப்படுத்துகிறார் என்பதைக் குறிக்கிறது.

பலர் தங்களைப் பெண் குழந்தை, ஆண் குழந்தை, பெண் அல்லது ஆண் என அடையாளப்படுத்துகின்றனர்.

சிலருடைய சமூகப் பாலின அடையாளம் பிறப்பின்போது பதிவு செய்யப்பட்ட பாலினப் பண்புகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம். அவர்கள் தங்களை திருநர் (Transgender), குயர் (Queer) அல்லது வேறு பெயர்களால் அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், ஒரு பெண் குழந்தை சமூகத்தால் விதிக்கப்படும் பெண்ணியத்துடன் தொடர்புடைய விதிகளை ஏற்கவில்லை என்பதற்காக, அவர் கட்டாயமாக திருநராக இருக்க வேண்டும் என்பதில்லை.

அதேபோன்று, நடனம் அல்லது சமையலில் ஆர்வம் கொண்ட ஆண் குழந்தை கட்டாயமாக திருநராகவோ சமபாலின ஈர்ப்புடையவராகவோ இருக்க வேண்டியதில்லை.

ஆடை, தலைமுடி, குரல், பொழுதுபோக்குகள் அல்லது ஒருவர் யாருடன் நட்பாக இருக்கிறார் என்பவற்றைப் பார்த்து ஒருவரின் சமூகப் பாலின அடையாளத்தைத் தீர்மானிக்க முடியாது.

நினைவில் கொள்ளுங்கள் – ஒருவர் தன்னை எவ்வாறு அடையாளப்படுத்துகிறார் என்பதை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால், அவர்களை மரியாதையுடன் நடத்துவதற்கு அது தடையாக இருக்கக்கூடாது.

இது உயிரியல் நிலைமையா? அல்லது சமூகத்தால் உருவாக்கப்பட்ட விதியா?

“பெண் பிள்ளைகள் இப்படிச் செய்ய வேண்டும்” அல்லது “ஆண் பிள்ளைகள் இதைச் செய்யக்கூடாது” என்று ஒருவர் கூறும்போது, பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்:

  • இந்த விதி உடலில் நடைபெறும் உயிரியல் செயல்முறையுடன் தொடர்புடையதா?
  • அல்லது இது சமூகத்தால் உருவாக்கப்பட்ட கருத்தா?
  • இதன் மூலம் அனைவருக்கும் சமமான பாதுகாப்பும் சுதந்திரமும் கிடைக்கிறதா?
  • ஒரு குழுவினருக்கு அதிக அதிகாரம் அல்லது சுதந்திரம் வழங்கப்படுகிறதா?
  • இதனால் யாருடைய சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது, யார் மௌனமாக்கப்படுகிறார் அல்லது யார் தண்டிக்கப்படுகிறார்?

ஒரு சிறிய பெட்டிக்குள் வாழ வேண்டியதில்லை

ஒரு பெண் குழந்தை தன்னம்பிக்கையுடனும், சுயாதீனமாகவும், வெளிப்படையாகவும், இலக்குகளுடன் வாழ்வதால் அவளது பெண்ணியம் குறைவதில்லை.

ஒரு ஆண் குழந்தை மென்மையானவராகவும், அன்பானவராகவும், உணர்வுபூர்வமானவராகவும் அல்லது பயப்படுபவராகவும் இருப்பதை ஏற்றுக்கொள்வதால் அவனது ஆண்மை குறைவதில்லை.

ஒரு குழந்தை தனது சமூகப் பாலினத்துடன் தொடர்புடைய பாரம்பரியமான விடயங்களை விரும்பினால் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரச்சினை ஏற்படுவது, அவற்றை விரும்புமாறு குழந்தைகளை வற்புறுத்தும்போதோ அல்லது வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடுத்ததற்காக அவர்களைத் தண்டிக்கும்போதோ தான்.

சமூகப் பாலினம் குறித்து மேலும் ஒரு புதிய விதிகளின் தொகுப்பை உருவாக்குவது எமது நோக்கம் அல்ல.

ஒவ்வொரு குழந்தைக்கும் தான் யார் என்பதைப் புரிந்துகொள்ளவும், தான் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கவும், பிறரை மதிக்கவும், தீங்கு விளைவிக்கும் சமூகப் பாலினக் கருத்துகளால் கட்டுப்படுத்தப்படாமல் வாழவும் இடமளிப்பதே எமது நோக்கமாகும்.

அநியாயமான விதிகளை மாற்றிய பெண்கள்

“பெண் பிள்ளைகள் கல்வி கற்கத் தேவையில்லை”, “பெண்கள் வாக்களிக்க முடியாது”, “அரசியல் என்பது ஆண்களின் வேலை” அல்லது “மாதவிடாய் ஏற்படும் பெண்கள் அசுத்தமானவர்கள்” போன்ற கருத்துகள் உயிரியல் உண்மைகள் அல்ல. அவை சமூகத்தால் உருவாக்கப்பட்ட சமூகப் பாலினக் கருத்துகளாகும்.

நீண்ட காலமாக இக்கருத்துகள் சட்டங்கள், மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களாக மாறி, பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் மட்டுப்படுத்தின.

கடந்த காலங்களில் பல நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கவில்லை. பிரித்தானியாவில் எம்மலின் பாங்க்ஹர்ஸ்ட் (Emmeline Pankhurst) மற்றும் பல பெண்கள் வாக்களிக்கும் உரிமையைக் கோரி போராட்டங்களை நடத்தினர். அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டும் இருந்தனர். எனினும், அவர்களின் போராட்டங்களின் காரணமாக பெண்களுக்கும் நாட்டின் முடிவெடுப்புகளில் பங்கேற்கும் உரிமை இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

பெண் பிள்ளைகளின் கல்விக்காகவும் பெண்கள் போராடினர். 1848ஆம் ஆண்டு இந்தியாவில் சாவித்திரிபாய் பூலே (Savitribai Phule) பெண் பிள்ளைகளுக்கான பாடசாலை ஒன்றை ஆரம்பித்தார். அவருக்கு அவமதிப்புகளும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவர் கற்பிப்பதை நிறுத்தவில்லை.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் (Malala Yousafzai) பெண் பிள்ளைகளின் கல்வி உரிமைக்காகக் குரல் கொடுத்தார். அவரைத் துப்பாக்கிச் சூட்டின் மூலம் மௌனமாக்க முயற்சித்தபோதும், அவர் உயிர் தப்பி மீண்டும் உலகம் முழுவதும் பெண் பிள்ளைகளுக்காகக் குரல் கொடுத்தார்.

இந்தியாவைச் சேர்ந்த மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி (Muthulakshmi Reddy) பெண்களின் சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்புக்காகப் பணியாற்றினார். பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் ஆனார். பெண்களும் மருத்துவர்களாகவும், சட்டங்களை உருவாக்குபவர்களாகவும், முடிவெடுக்கும் தலைவர்களாகவும் இருக்க முடியும் என்பதை அவர் எடுத்துக்காட்டினார்.

1960ஆம் ஆண்டு இலங்கையின் சிறிமாவோ பண்டாரநாயக்க உலகின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்றார். 1994ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

பெண்களால் ஆட்சி செய்ய முடியாது என்ற கருத்துக்கு அவர்களின் தலைமைத்துவம் சவால் விடுத்தது. இருப்பினும், சில பெண்கள் உயர்ந்த பதவிகளை அடைந்திருப்பதால் மட்டும் பாலின சமத்துவம் முழுமையடைவதில்லை. அனைத்து பெண் பிள்ளைகளுக்கும் அரசியலிலும் முடிவெடுப்பிலும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.

மத வழிபாட்டுத் தலங்களிலும் பெண்கள் அநியாயமான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

இந்தியாவில் சபரிமலை ஆலயத்திற்கு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைவது தடுக்கப்பட்டிருந்தது. மாதவிடாய் ஏற்படக்கூடிய வயதிலுள்ள பெண்கள் “அசுத்தமானவர்கள்” என்ற கருத்துடன் இந்தக் கட்டுப்பாடு தொடர்புபடுத்தப்பட்டது.

பெண்ணியவாதிகளின் போராட்டங்களின் பின்னர், 2018ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் பெண்களும் ஆலயத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

2019ஆம் ஆண்டு பிந்து அம்மினி (Bindu Ammini) மற்றும் கனகதுர்கா (Kanakadurga) ஆகியோர் கடுமையான எதிர்ப்புகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஆலயத்திற்குள் நுழைந்தனர்.

இந்த வரலாற்று நிகழ்வுகள், சமூகத்தால் உருவாக்கப்பட்ட சில விதிகளும் நம்பிக்கைகளும் காலப்போக்கில் மாற்றப்பட முடியும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் சமமான கல்வி, சுதந்திரம், பாதுகாப்பு, குரல் மற்றும் முடிவெடுக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதே சமத்துவமான சமூகத்தின் அடிப்படையாகும்.

Welcome to your சமூகப் பாலினத்தைப் புரிந்துகொள்வோம்

1. කැමැත්ත යනු යහපත් ලිංගික හා ප්‍රජනන පවත්වා ගැනීමට අත්වශ්‍ය මූලධර්මයකි.

2.යම් ක්‍රියාවක් සදහා ලබා දුන් කැමැත්ත ඕනෑම අවස්ථාවකදී ඉවත් කර ගත හැකියි.

3. නිදා සිටින පුද්ගලයෙකුට කැමැත්ත පල කළ හැකිය.

4.වයස අවුරුදු 16ට අඩු ගැහැණු දරුවෙකු සමග ලිංගික ඇසුරක් පැවැත්වීම නීතියෙන් වරදකි.

5.බය කිරීමෙන් හෝ බලපෑම් කිරීමෙන් ලබා ගන්න කැමැත්ත වලංගු කැමැත්තකි.