பெண் மற்றும் ஆண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான வழிகாட்டி
மாதவிடாய் பற்றி அறிந்துகொள்வதன் மூலம், குழந்தைகள் தங்களுடைய உடலைப் புரிந்துகொள்ளவும், மற்றவர்களிடம் அக்கறையுடன் நடந்துகொள்ளவும் முடியும்.
உங்கள் குழந்தைக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், வெட்கம், பயம் அல்லது தீங்கு விளைவிக்கும் தவறான கருத்துகள் இன்றி வளர்வதற்கு நீங்கள் உதவ முடியும்.
1. இந்தத் தலைப்பு ஏன் முக்கியமானது?
மாதவிடாய் என்பது ஒரு சாதாரண உடலியல் செயல்முறையாகும். இருப்பினும், மாதவிடாய் ஏற்படுவதால் ஒருவர் அசுத்தமாகிவிடுகிறார், பலவீனமாகிவிடுகிறார் அல்லது அன்றாடச் செயல்பாடுகளைச் செய்ய முடியாது போன்ற கருத்துகளைப் பிள்ளைகள் கேட்கக்கூடும்.
கிண்டல் செய்தல், இரகசியமாக வைத்திருத்தல் மற்றும் வெட்கப்படுத்துதல் போன்றவை கேள்விகளைக் கேட்பதற்கும் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கும் சிரமத்தை ஏற்படுத்தலாம்.
பெரியவர்கள் நடந்துகொள்ளும் விதத்திலிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். தாய், தந்தை மற்றும் பிற பராமரிப்பாளர்கள் மாதவிடாய் பற்றிச் சுலபமாகப் பேசும்போது, ஏனைய சுகாதாரத் தலைப்புகளைப் போலவே இதைப் பற்றியும் அக்கறையும் மரியாதையும் அவசியம் என்பதைப் பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள்.
ஆண் குழந்தைகளுக்கும் மாதவிடாய் பற்றிய சரியான தகவல்கள் தேவை. ஒருவர் அனுபவிக்கும் விடயத்தைப் புரிந்துகொள்வதன் மூலம், அக்கறையுள்ள சகோதரராகவோ, நண்பராகவோ அல்லது துணையாகவோ இருக்க முடியும்.
2. உரையாடலை எவ்வாறு ஆரம்பிப்பது?
இந்தத் தலைப்பைப் பற்றி அவ்வப்போது பேசுங்கள். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் விளக்க வேண்டிய அவசியமில்லை.
Bakteens கட்டுரையை ஒன்றாக வாசிக்கும்போதோ அல்லது மாதவிடாயின்போது பயன்படுத்தும் பொருட்களை வாங்கும்போதோ உரையாடலை ஆரம்பிக்கலாம்.
- “மாதவிடாய் பற்றி பாடசாலையில் என்ன கற்றுக்கொண்டாய்?”
- “மாதவிடாய் பற்றி உனக்குப் புரிந்துகொள்ளக் கடினமான ஏதாவது ஒன்றைக் கேட்டிருக்கிறாயா?”
- “ஒருவருக்குப் பாவாடைத் துண்டு (பேட்) தேவைப்படும்போது பாடசாலையில் உள்ளவர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள்?”
- “நண்பரின் ஆடையில் மாதவிடாய் இரத்தக் கறை இருந்தால், நீ என்ன செய்யலாம்?”
திருத்துவதற்கு முன்பு குழந்தை கூறுவதைக் கவனமாகக் கேளுங்கள். குழந்தை சிரித்தாலும் அல்லது அசௌகரியத்தை வெளிப்படுத்தினாலும் அமைதியாக இருங்கள்.
இவ்வாறு கூறலாம்:
“பழக்கமில்லாத ஒரு விடயத்தைப் பற்றிப் பேசும்போது கொஞ்சம் அசௌகரியமாக இருக்கலாம். ஆனால் மாதவிடாய் என்பது இயல்பான ஒன்று. நீ என்னிடம் கேள்விகள் கேட்கலாம்.”
பதில் தெரியாவிட்டால் இவ்வாறு கூறுங்கள்:
“எனக்கு இதில் சரியான பதில் உறுதியாகத் தெரியவில்லை. நாம் சரியான தகவல்களை ஒன்றாகத் தேடுவோம்.”
3. தெளிவுபடுத்த வேண்டிய முக்கிய விடயங்கள்
மாதவிடாய் என்றால் என்ன?
கருப்பையின் உட்புறப் படலம் இரத்தம் மற்றும் திசுக்களாக யோனிப் பாதை வழியாக உடலிலிருந்து வெளியேறுவது மாதவிடாய் எனப்படுகிறது. இந்தச் செயல்முறை ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.
மாதவிடாய் இரத்தத்தால் ஒருவர் அசுத்தமாகவோ தீட்டானவராகவோ மாறுவதில்லை.
ஒவ்வொரு குழந்தையின் உடலும் வெவ்வேறு வேகத்தில் வளர்ச்சியடைகிறது.
முதல் மாதவிடாய் பெரும்பாலும் சுமார் 12 வயதில் ஆரம்பமாகிறது. இருப்பினும், அந்த வயது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
குழந்தைகளை ஒருவருடன் ஒருவரை ஒப்பிட வேண்டாம். “முன்கூட்டியே வளர்கிறாய்” அல்லது “தாமதமாகிவிட்டது” என்று குழந்தைகளைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கவும் வேண்டாம்.
மாதவிடாய் எப்போதும் குறிப்பிட்ட நாளில் ஏற்படாது.
மாதவிடாய் ஆரம்பித்த முதல் சில ஆண்டுகளில் அது ஒழுங்கற்றதாக இருக்கலாம். பொதுவாக, இரத்தப்போக்கு இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கலாம்.
பொதுவாக, அன்றாடச் செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.
மாதவிடாய் காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டும், பாடசாலைக்குச் செல்லாமல் இருக்க வேண்டும், குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் அல்லது விளையாட்டுகளை நிறுத்த வேண்டும் என்பது மருத்துவ ரீதியாக அவசியமில்லை.
இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட வழக்கமான சமச்சீரான உணவுகளை உண்ணலாம். குழந்தையின் வசதி மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்ப செயல்பாடுகளை மாற்றியமைக்கலாம்.
ஒவ்வொருவரின் அனுபவமும் வேறுபடும்.
சிலருக்கு வயிற்றுவலி, சோர்வு அல்லது மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம். மற்றவர்களுக்கு இத்தகைய அறிகுறிகள் குறைவாக இருக்கலாம்.
ஒருவர் தனக்குத் தேவையானதைப் பற்றிக் கூறும்போது கவனமாகக் கேளுங்கள். ஒவ்வொரு உணர்வுக்கும் அல்லது கருத்து வேறுபாட்டுக்கும் மாதவிடாய்தான் காரணம் என்று கருத வேண்டாம்.
முதல் மாதவிடாய் ஏற்படுவதால் ஒரு குழந்தை வயது வந்தவராகிவிடுவதில்லை.
குழந்தைக்கு இன்னமும் பாதுகாப்பும் ஆதரவும் வளர்வதற்கான கால அவகாசமும் தேவை.
மாதவிடாய் ஆரம்பிப்பதால் ஒருவர் பாலியல் உறவுக்கோ, திருமணத்திற்கோ அல்லது பெற்றோராக மாறுவதற்கோ மனரீதியாகத் தயாராகிவிட்டார் என்று அர்த்தமல்ல.
4. ஆதரவு கிடைக்கும் வீட்டுச் சூழலை எவ்வாறு உருவாக்குவது?
மாதவிடாயை அன்றாட உரையாடலின் ஒரு பகுதியாக்குங்கள்.
“மாதவிடாய்”, “கருப்பை”, “யோனிப் பாதை” போன்ற தெளிவான சொற்களைப் பயன்படுத்துங்கள். மாதவிடாயை அசுத்தமான அல்லது வெட்கப்பட வேண்டிய ஒன்றாக விவரிக்க வேண்டாம்.
மாதவிடாய்க்கான பேட்களை வாங்குவது வீட்டில் மேற்கொள்ளும் சாதாரணப் பணியாக இருக்கலாம். சோப்பு அல்லது பற்பசை வாங்குவதைப் போலவே, தந்தையர்களும் ஆண் குழந்தைகளும் இதற்காக உதவலாம்.
கிண்டல் செய்வதையும் உணர்வுகளைப் புறக்கணிக்கும் கருத்துகளையும் தடுத்து நிறுத்துங்கள்.
இரத்தக் கறைகள், நாற்றம் அல்லது மாதவிடாயின்போது பயன்படுத்தும் பொருட்கள் பற்றிக் கிண்டல் செய்ய அனுமதிக்க வேண்டாம்.
ஒருவருக்குச் சோகம் அல்லது கோபம் ஏற்படும்போது, “உனக்கு மாதவிடாய் வந்திருக்கும்” என்று கூற வேண்டாம்.
இத்தகைய செயல் நடந்தால், அமைதியாக இவ்வாறு கூறுங்கள்:
“ஒருவரை வெட்கப்படுத்துவதற்கோ அவர்களுடைய உணர்வுகளைப் புறக்கணிப்பதற்கோ மாதவிடாயைப் பற்றி நாம் பேசக்கூடாது.”
தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள்.
மாதவிடாய் பற்றி வெளிப்படையாகப் பேசுவது, ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை அனைவரிடமும் கூறுவது என்று அர்த்தமல்ல.
முதல் மாதவிடாய் பற்றிய தகவலை உறவினர்களிடம் கூறுவதற்கு அல்லது கொண்டாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வதற்கு முன்பு குழந்தையின் விருப்பத்தைக் கேளுங்கள். குழந்தையின் சம்மதம் இல்லாமல் புகைப்படங்களை எடுக்கவோ அதைப் பற்றி இணையத்தில் பதிவிடவோ வேண்டாம்.
மாதவிடாய் ஏற்படுவதால் ஒருவர் அசுத்தமாக மாறுவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள். உணவு, குளித்தல், பாடசாலைக்குச் செல்லுதல் அல்லது ஆதரவளிக்கும் நபர்களுடன் இருப்பது போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் பழக்கங்களைத் தவிருங்கள்.
பராமரிப்பையும் வீட்டு வேலைகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், வீட்டு வேலைகளில் உதவி செய்து ஓய்வெடுக்க வாய்ப்பளியுங்கள்.
அனைத்துக் குழந்தைகளும் ஒருவருக்கொருவர் உதவுவதற்கு ஊக்குவியுங்கள். ஒருவரிடம் அக்கறையுடன் நடந்துகொள்வதற்கு, அவரைப் போலவே மாதவிடாய் அனுபவம் இருக்க வேண்டிய அவசியமில்லை.
மாதவிடாய் ஏற்படும் குழந்தைக்கு நடைமுறையில் உதவுவதற்கான சில வழிகள்
சிறிய அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பைத் தயாரிக்கவும்: ஒரு மேலதிக பேட், உள்ளாடை மற்றும் இரத்தக் கறை படிந்த ஆடைகளை வைப்பதற்கான சிறிய பை ஆகியவற்றை அதில் சேர்க்கவும்.
அடுத்த மாதவிடாய்க்குத் தயாராகுங்கள்: ஒவ்வொரு மாதவிடாயும் ஆரம்பிக்கும் நாளைக் குறிப்பேட்டில் பதிவு செய்ய விரும்பினால் உதவுங்கள். நாட்கள் மாறுபடக்கூடும் என்பதால், ஒரு குறிப்பிட்ட நாளை மட்டுமே நம்பாமல் தேவையான பொருட்களைத் தயாராக வைத்திருங்கள்.
தேர்வு செய்ய அனுமதியுங்கள்: பேட்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேட்கள், மாதவிடாய் இரத்தத்தை உறிஞ்சும் உள்ளாடைகள், டாம்பன்கள் மற்றும் மாதவிடாய்க் கிண்ணங்கள் போன்ற பல்வேறு தெரிவுகள் உள்ளன. பயன்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றவும், தமக்கு வசதியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் உதவுங்கள்.
வீட்டில் தேவையான வசதிகளை ஏற்படுத்துங்கள்: தண்ணீர், சோப்பு, தனியுரிமை மற்றும் பொருத்தமான குப்பைத்தொட்டி ஆகியவற்றை வழங்குங்கள். பேட்கள் அல்லது டாம்பன்களை கழிப்பறைக்குள் போட்டு நீரால் அடித்துச் செல்ல வேண்டாம்.
பாடசாலையில் யாரிடம் உதவி பெறலாம் என்பதைப் பற்றிப் பேசுங்கள்: நம்பகமான ஒரு பெரியவரை அடையாளம் காணுங்கள். ஆடையில் இரத்தக் கறை ஏற்பட்டால், குழந்தைக்கு ஆறுதல் கூறி தேவையான நடைமுறை உதவிகளை வழங்குங்கள்.
5. ஒன்றாகச் செய்யக்கூடிய ஒரு சிறிய செயல்பாடு
இவ்வாறு கேளுங்கள்:
“வகுப்பில் இருக்கும் நண்பர் ஒருவரின் ஆடையில் மாதவிடாய் இரத்தக் கறை இருப்பதை ஒரு குழந்தை கவனிக்கிறது. அவருக்கு உதவக்கூடிய விதத்தில் எவ்வாறு நடந்துகொள்ளலாம்?”
செய்யக்கூடிய விடயங்களைப் பற்றிப் பேசுங்கள்:
- மற்றவர்களுக்குக் கேட்காத வகையில் அந்த நபரிடம் தெரிவியுங்கள்.
- அவருக்கு உதவி தேவையா என்று கேளுங்கள்.
- ஒரு பேட் அல்லது நம்பகமான ஆசிரியரைக் கண்டுபிடிக்க உதவுங்கள்.
- அந்த நபரின் தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள்.
- கிண்டலில் கலந்துகொள்ளவோ புகைப்படங்களைப் பகிரவோ வேண்டாம்.
இறுதியாக இவ்வாறு கூறுங்கள்:
“அக்கறையுடன் நடந்துகொள்வதற்கு உனக்கும் மாதவிடாய் ஏற்பட வேண்டிய அவசியமில்லை.”
6. கடினமான கேள்விகளுக்குப் பதிலளிப்பது எப்படி?
- “மாதவிடாய் இரத்தம் அசுத்தமானதா?”
“இல்லை. மாதவிடாய் என்பது ஒரு சாதாரண உடலியல் செயல்முறை. வசதியாகவும் சுகாதாரமாகவும் இருப்பதற்காக நாம் உடலைக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்கிறோம், பொருத்தமான பொருட்களைப் பயன்படுத்துகிறோம். மாதவிடாய் ஏற்படுவதால் ஒருவர் அசுத்தமாக மாறுவதில்லை.”
- “ஆண் குழந்தைகள் மாதவிடாய் பற்றி ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?”
“உடலைப் பற்றிப் புரிந்துகொள்வது அனைவருக்கும் பயனுள்ளதாகும். நீ அக்கறை கொண்டிருக்கும் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படலாம். அவரை எவ்வாறு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வது முக்கியம்.”
- “என் சகோதரிக்குச் சோகமோ கோபமோ ஏற்படுவதற்குக் காரணம் மாதவிடாயா?”
“சிலருக்கு மாதவிடாய் வருவதற்கு முன்பு மனநிலையில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் நாம் ஊகிக்கக்கூடாது. அவருக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்டு, அவர் கூறுவதைக் கவனமாகக் கேளுங்கள்.”
- “மாதவிடாய் ஆரம்பித்ததும் எல்லோரிடமும் சொல்ல வேண்டுமா?”
“இல்லை. யாரிடம் கூறுவது என்பதை நீயே தேர்ந்தெடுக்கலாம். உதவி தேவைப்பட்டால் என்னிடமோ அல்லது வேறு நம்பகமான பெரியவரிடமோ கூறலாம்.”
- “மாதவிடாயின்போது அதிக வலி ஏற்பட்டால் என்ன செய்வது?”
“என்னிடம் கூறு. வலியைத் தனியாகச் சகித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. குறிப்பாக, பாடசாலைப் பணிகள், தூக்கம் அல்லது அன்றாடச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால், நாம் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்வோம்.”
7. கூறக்கூடாத விடயங்கள்
இவ்வாறு கூற வேண்டாம்: “இவை பெண்களுக்கான விடயங்கள்.”
அதற்குப் பதிலாக இவ்வாறு கூறுங்கள்: “மாதவிடாய் என்றால் என்ன என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.”
இவ்வாறு கூற வேண்டாம்: “பேட்களை யாருக்கும் தெரியும்படி வைக்காதே.”
அதற்குப் பதிலாக இவ்வாறு கூறுங்கள்: “இவை சாதாரணமான சுகாதாரத் தேவைகள். உன்னுடைய தனிப்பட்ட தகவல்கள் தனிப்பட்டவையாகவே இருக்கலாம்.”
இவ்வாறு கூற வேண்டாம்: “நீ இப்போது வயது வந்த பெண்ணாகிவிட்டாய்.”
அதற்குப் பதிலாக இவ்வாறு கூறுங்கள்: “உன்னுடைய உடல் மாறிக்கொண்டிருக்கிறது. உனக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்.”
இவ்வாறு கூற வேண்டாம்: “எல்லோருக்கும் வலிக்கும். பொறுத்துக்கொள்.”
அதற்குப் பதிலாக இவ்வாறு கூறுங்கள்: “உனக்கு எப்படி இருக்கிறது என்று என்னிடம் கூறு. நாம் உதவியைப் பெற்றுக்கொள்வோம்.”
இவ்வாறு கூற வேண்டாம்: “மீண்டும் ஆடையில் இரத்தக் கறை ஏற்பட்டுவிட்டதா!”
அதற்குப் பதிலாக இவ்வாறு கூறுங்கள்: “நாம் சுத்தமான ஆடையைக் கண்டுபிடித்து, உனக்கு வசதியாக இருக்க ஏற்பாடு செய்வோம்.”
இவ்வாறு கூற வேண்டாம்: “உனக்குக் கோபம் வருவதற்குக் காரணம் மாதவிடாய் மட்டும்தான்.”
அதற்குப் பதிலாக இவ்வாறு கூறுங்கள்: “உனக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது? நான் கவனமாகக் கேட்கிறேன்.”
8. எப்போது, எங்கிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்?
பின்வரும் சூழ்நிலைகளில் மருத்துவர் அல்லது பொருத்தமான சுகாதார நிபுணருடன் பேசுங்கள்:
- மாதவிடாய் வலி அன்றாடச் செயல்பாடுகளுக்குத் தடையாக இருந்தால்.
- இரத்தப்போக்கு மிகவும் அதிகமாக இருந்தால். உதாரணமாக, இரத்தத்தில் நனைந்த பேட் அல்லது டாம்பனை ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் அல்லது இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை மாற்ற வேண்டியிருந்தால்.
- 16 வயதாகியும் முதல் மாதவிடாய் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றால்.
மாதவிடாய் ஏற்பட்ட நாட்களையும் அறிகுறிகளையும் பதிவு செய்துகொள்வதன் மூலம், என்ன நடக்கிறது என்பதை மருத்துவர் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும்.
இலங்கையில் மருத்துவர், சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் கிளினிக் அல்லது குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் மூலம் பொருத்தமான சேவையைப் பெறுவதற்கான வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்ளலாம்.
குழந்தைக்குக் கேள்விகள் கேட்க உதவுங்கள். குழந்தை விரும்பினால், சுகாதார நிபுணருடன் தனியாகப் பேசுவதற்கும் வாய்ப்பளியுங்கள்.
Bakteens தகவல்கள் தொடர்பான கேள்விகளுக்கு WhatsApp: 071 801 5702 என்ற எண்ணின் மூலம் தொடர்புகொள்ளலாம். இதனை மருத்துவப் பரிசோதனைக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியாது.
ஒவ்வொரு குழந்தையும் கேட்க வேண்டிய செய்தி இதுவாகும்:
மாதவிடாய் என்பது இயல்பான ஒன்று. நாம் ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கிறோம், தனியுரிமையைப் பாதுகாக்கிறோம், தேவையான சுகாதார ஆதரவைப் பெற்றுக்கொள்ள உதவுகிறோம்.