மனநல நலன் பற்றி பேசுவோம்

மனநலம் என்பது நாம் சிந்திக்கும் விதம், உணரும் விதம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை எதிர்கொள்ளும் விதம் ஆகும். உடல் ஆரோக்கியத்தைப் போலவே நம் அனைவருக்கும் மனநலமும் உள்ளது.

இளம்பருவத்தில் நமது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. பாடசாலைப் பணிகள், மேலதிக வகுப்புகள், பரீட்சைகள், குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், நட்புகள், காதல் உறவுகள், உடலில் ஏற்படும் மாற்றங்கள், பணப் பிரச்சினைகள், துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகள், பாகுபாடு காட்டுதல், இணையத்தில் நடைபெறும் விடயங்கள் போன்றவை நாம் உணரும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

சில நாட்களில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையுடனும் இருக்கலாம். மற்றொரு நாளில் பயம், கோபம், தனிமை, குழப்பம் அல்லது அதிக களைப்பு ஏற்படலாம். கடினமான உணர்வுகள் ஏற்படுவதால் உங்களிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தமல்ல. இருப்பினும், அந்த உணர்வுகளை நிர்வகிப்பதற்கு நாம் ஆதரவைப் பெற்றுக்கொள்ளலாம்.

கடினமான உணர்வுகளை நிர்வகிப்பதற்கும் ஓரளவு நிம்மதியைப் பெற்றுக்கொள்வதற்கும் நீங்கள் சில சிறிய விடயங்களைச் செய்யலாம்.

  • நீங்கள் நம்பும் ஒருவருடன் பேசுதல்
  • உரிய நேரத்தில் உணவு உட்கொள்வதுடன் போதுமான அளவு தண்ணீர் அருந்துதல்
  • நல்ல தூக்கத்தைப் பெற்றுக்கொள்ளுதல்
  • உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருத்தல்
  • சமூக ஊடகங்களிலிருந்து சிறிது நேரம் விலகியிருத்தல்
  • எழுதுதல், ஓவியம் வரைதல், இசை கேட்டல் அல்லது ஆக்கபூர்வமான ஏதாவது ஒன்றைச் செய்தல்
  • உங்களுக்குப் பாதுகாப்பாக உணரப்படும் நபர்களுடன் நேரத்தைச் செலவிடுதல்
  • உங்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்போது மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வெளியேற்ற முயற்சித்தல்

இந்தச் செயல்கள் உங்களுக்கு ஓரளவு நிம்மதியை அளிக்கக்கூடும். இருப்பினும், இவற்றைத் தொழில்முறை சிகிச்சை அல்லது ஆதரவுக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியாது. நிலைமையைச் சமாளிப்பது உங்களுக்குக் கடினமாக இருந்தால், மேலதிக ஆதரவைக் கோருவது முற்றிலும் இயல்பானது.

உங்கள் எண்ணங்கள் அல்லது உணர்வுகள்:

  • கட்டுப்படுத்துவதற்குக் கடினமாகி வந்தால்,
  • நீண்ட காலமாகத் தொடர்ந்தால் அல்லது மீண்டும் மீண்டும் ஏற்பட்டால்,
  • உங்கள் தூக்கம், உணவுப் பழக்கம், பாடசாலைப் பணிகள் அல்லது உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தினால்,
  • அன்றாட வழக்கமான செயல்களைச் செய்வதற்குக் கடினமாக இருந்தால்,
  • பாடசாலை, நண்பர்கள் அல்லது குடும்பத்தினரைத் தவிர்த்து இருக்கச் செய்தால்,
  • உங்களுக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால்,
  • வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை என்று உணர்ந்தால்,

உதவி கோருவது முக்கியம்.

நிலைமையை இனிமேலும் தாங்கிக்கொள்ள முடியாத நிலை வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. முன்கூட்டியே உதவி கோருவதன் மூலம் உங்களுக்குப் பொருத்தமான ஆதரவைக் கண்டறிவது எளிதாகலாம்.

உரையாடலை எவ்வாறு ஆரம்பிப்பது?

உங்கள் பெற்றோர், உங்களைப் பராமரிக்கும் வயது வந்தவர், உறவினர், ஆசிரியர், பாடசாலை ஆலோசகர், பயிற்றுவிப்பாளர், மருத்துவர் அல்லது நீங்கள் நம்பும் வேறு வயது வந்த ஒருவருடன் மனநலம் பற்றிப் பேசலாம்.

பேசுவது கடினமாக இருந்தால், ஒரு செய்தியை அனுப்பலாம் அல்லது நீங்கள் சொல்ல விரும்புவதை எழுதி வழங்கலாம். பின்வரும் விதமாக உரையாடலை ஆரம்பிக்கலாம்.

  • “இந்த நாட்களில் நான் முன்புபோல் உணரவில்லை.”
  • “எனக்கு ஒரு சிறிய பிரச்சினை இருக்கிறது. உங்களுடைய உதவி எனக்குத் தேவை.”
  • “இந்த விடயங்களைச் சமாளிப்பது எனக்குக் கடினமாக இருக்கிறது.”
  • “என்னைக் கண்டிக்காமல் கொஞ்சம் கேட்டுக்கொள்ள முடியுமா?”
  • “நான் யாரிடமாவது பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.”
  • “எனக்குப் பயமாக இருக்கிறது.”
  • “என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை.”

நீங்கள் முதலில் பேசியவர் உங்களுக்குச் செவிசாய்க்கவில்லை என்றாலோ அல்லது நீங்கள் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கவில்லை என்றாலோ, மற்றொரு நம்பகமான வயது வந்தவரிடம் கூறுங்கள்.

உங்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால்…

உங்களுக்கே தீங்கு விளைவித்துக்கொள்ளக்கூடும் என்று நீங்கள் நினைத்தால், ஏற்கனவே கடுமையான பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தால், அதிக அளவில் மருந்துகளை உட்கொண்டிருந்தால் அல்லது நீங்கள் ஆபத்தில் இருந்தால்:

  • உங்களுக்குத் தீங்கு விளைவிக்கப் பயன்படுத்தக்கூடிய பொருட்களிலிருந்து விலகி இருங்கள்.
  • மற்றவர்கள் இருக்கும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள்.
  • நம்பகமான வயது வந்த ஒருவரிடம் உடனடியாகக் கூறுங்கள்.
  • அருகிலுள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுங்கள் அல்லது வெளிநோயாளர் பிரிவுக்குச் (OPD) செல்லுங்கள்.
  • அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், 1990 சுவசெரிய (Suwa Seriya) அவசர அம்புலன்ஸ் சேவையை அழையுங்கள்.
  • நீங்கள் ஆபத்தில் இருந்து பொலிஸ் உதவி தேவைப்பட்டால், 119 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

நீங்கள் பின்வரும் சேவைகளையும் தொடர்புகொள்ளலாம்:

  • 1926 – தேசிய மனநல உதவிச் சேவை: மனநல ஆதரவு மற்றும் வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்வதற்கு.
  • 1333 – நெருக்கடி நிலை ஆதரவுச் சேவை: இலவசமாகவும் இரகசியமாகவும் 24 மணி நேரமும் உணர்வுசார் ஆதரவையும் நெருக்கடி நிலை உதவியையும் பெற்றுக்கொள்வதற்கு.
  • 1929 – இலங்கை சிறுவர் உதவிச் சேவை: உங்களுக்கு 18 வயதிற்குக் குறைவாக இருந்து, துஷ்பிரயோகம், புறக்கணிப்பு, வன்முறை, சுரண்டல் அல்லது பாதுகாப்பற்ற சூழ்நிலையை எதிர்கொண்டால்.
  • 0112 682 570 – இலங்கை சுமித்ரயோ (Sri Lanka Sumithrayo): இலவசமாகவும் இரகசியமாகவும் மனநல ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு.

ஓர் இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியாவிட்டால், மற்றொரு சேவையைத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லுங்கள். நீங்கள் உடனடியாக ஆபத்தில் இருந்தால் தனியாக இருக்காதீர்கள்.

எனது மனநலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

நமது மனமும் உடலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றில் ஏற்படும் மாற்றம் மற்றொன்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் நீண்ட காலமாகக் கவலை, பயம், தனிமை அல்லது மன அழுத்தத்துடன் இருந்தால், உங்கள் உடலும் அதனைப் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தலாம்.

  • தூங்குவதற்குச் சிரமப்படுதல் அல்லது எப்போதும் தூங்க வேண்டும் என்று தோன்றுதல்
  • பசியின்மை ஏற்படுதல் அல்லது வழக்கத்தைவிட அதிகமாக உணவு உட்கொள்ளுதல்
  • தலைவலி, வயிற்றுவலி அல்லது உடலில் வலி ஏற்படுதல்
  • ஓய்வெடுத்தாலும் களைப்பாக உணர்தல்
  • கவனம் செலுத்துவதற்கும் விடயங்களை நினைவில் வைத்துக்கொள்வதற்கும் சிரமப்படுதல்
  • பாடசாலைப் பணிகள், விளையாட்டுகள், நட்புகள் அல்லது வழக்கமாக விரும்பும் விடயங்களில் ஆர்வம் குறைதல்
  • அமைதியின்மை, எரிச்சல் அல்லது கோபம் அதிகரித்தல்

இவை அவற்றில் சில அறிகுறிகளாகும்.

ஒவ்வொரு உடல் அறிகுறியும் மனநலத்தினால் ஏற்படுகிறது என்று இதற்குப் பொருளல்ல. உடல் அறிகுறிகள் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவை தொடர்ந்து நீடித்தால், தீவிரமடைந்தால் அல்லது உங்களுக்குக் கவலையை ஏற்படுத்தினால், நம்பகமான வயது வந்த ஒருவரிடமிருந்து ஆதரவைப் பெற்றுக்கொள்வது முக்கியம்.

நோய்வாய்ப்படுதல், மாற்றுத்திறனுடன் வாழ்தல், நீண்டகால வலியைக் கொண்டிருத்தல் அல்லது உடலில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ளுதல் போன்றவையும் உங்கள் மனநலத்தைப் பாதிக்கலாம்.

மனநலம் தொடர்பாக உதவி கோரும்போது, “வலிமையாக இரு”, “அவற்றைப் பற்றிச் சிந்திக்காதே” அல்லது “உனக்குக் கிடைத்திருப்பதை நினைத்துச் சந்தோஷப்படு” போன்ற அறிவுரைகள் உங்களுக்குக் கிடைக்கலாம். ஆனால், பெரும்பாலும் இத்தகைய அறிவுரைகள் நிம்மதியை அளிப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில் மற்றொரு நம்பகமான வயது வந்தவருடன் பேசுவதன் மூலம் ஆதரவைப் பெற்றுக்கொள்ளலாம்.

மனநலத்திற்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன?

பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் என்பது கர்ப்பம் அல்லது பாலியல் ரீதியாகப் பரவும் தொற்றுகள் பற்றியது மட்டுமல்ல. அதில் உங்கள் உடல், பருவமடைதல், மாதவிடாய், பாலியல் ஆரோக்கியம், உறவுகள், சம்மதம், பாதுகாப்பு, சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை மற்றும் மரியாதையான சுகாதாரச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை ஆகியவையும் அடங்கும். உங்கள் மன மற்றும் சமூக நலனும் அதன் ஒரு பகுதியாகும்.

பருவமடைதல், மாதவிடாய் மற்றும் உங்கள் உடலைப் பற்றிய உணர்வுகள்

பருவமடையும் போது உங்கள் உடல், உணர்வுகள் மற்றும் உறவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம். மாதவிடாய், ஆணுறுப்பு விறைப்படைதல், தூக்கத்தில் விந்து வெளியேறுதல், முகப்பருக்கள், உடலில் முடி வளர்தல், மார்பகங்கள் வளர்தல், உடலின் வடிவம் அல்லது உங்கள் நண்பர்களின் உடல்கள் வளர்ச்சியடையும் வேகத்தில் உங்கள் உடல் வளர்ச்சியடையாமல் இருப்பது போன்ற விடயங்களைப் பற்றி உங்களுக்குக் குழப்பம் அல்லது கவலை ஏற்படலாம்.

இந்த மன அழுத்தம் சில நேரங்களில் உங்கள் தூக்கம், பசியுணர்வு மற்றும் மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்கலாம். அதேபோல், மாதவிடாய் வலி, அதிகமான இரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் ஆடைகளில் இரத்தக் கறைகள் ஏற்படுமோ என்ற பயம் ஆகியவையும் உங்கள் மனநிலை, தன்னம்பிக்கை மற்றும் பாடசாலை வருகையைப் பாதிக்கக்கூடும்.

பொதுவாக மாதவிடாய், தூக்கத்தில் விந்து வெளியேறுதல் போன்ற தலைப்புகள் குறித்து குடும்பத்திலோ பாடசாலையிலோ வெளிப்படையான உரையாடல்கள் இல்லாததால், இளம்பருவத்தில் இருக்கும் நீங்கள் இவற்றைப் பற்றி தனியாகச் சிந்தித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இவை மறைக்கப்பட வேண்டிய விடயங்கள் அல்ல. நம்பகமான வயது வந்த ஒருவருடன் பேசத் தயங்காதீர்கள்.

உறவுகள், சம்மதம் மற்றும் மனநலம்

ஆரோக்கியமான உறவில் நீங்கள் மதிக்கப்படுவதாகவும் பாதுகாப்பாகவும் உணர வேண்டும். நீங்கள் நீங்களாகவே இருக்கவும், உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், சொந்த முடிவுகளை எடுக்கவும், உங்கள் எல்லைகளைத் தீர்மானிக்கவும், “முடியாது” என்று சொல்லவும் உங்களுக்கு உரிமை இருக்க வேண்டும்.

உங்கள் நண்பர், வயது வந்த ஒருவர் அல்லது காதலர்:

  • நீங்கள் பேசும் நபர்களையோ அல்லது நீங்கள் செல்லும் இடங்களையோ கட்டுப்படுத்தினால்,
  • உங்கள் தொலைபேசியைப் பரிசோதித்தால் அல்லது கடவுச்சொற்களைக் கேட்டால்,
  • தனிப்பட்ட அல்லது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்புமாறு அழுத்தம் கொடுத்தால்,
  • பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுத்தால் அல்லது கட்டாயப்படுத்தினால்,
  • நீங்கள் சம்மதிக்காவிட்டால் உங்களை விட்டுச் செல்வதாக அல்லது தனக்குத் தானே தீங்கு விளைவித்துக்கொள்வதாக அச்சுறுத்தினால்,
  • உங்கள் உடல், சமூகப் பாலினம், பாலியல் தன்மை அல்லது தோற்றத்தை இழிவுபடுத்தினால்,
  • உங்களுக்குப் பயம், வெட்கம் அல்லது நீங்கள் மதிப்பற்றவர் என்ற உணர்வை ஏற்படுத்தினால்,

அது ஆரோக்கியமான உறவு அல்ல. அத்தகைய உறவு உங்கள் மனநலத்தைக் கடுமையாகப் பாதிக்கலாம்.

இத்தகைய நடத்தைகள் அன்பின் அடையாளங்கள் அல்ல. உங்கள் சுதந்திரமான சம்மதமின்றி ஏதேனும் நடந்திருந்தால், அது உங்கள் தவறு அல்ல. நம்பகமான வயது வந்த ஒருவரிடம் கூறுங்கள் அல்லது எங்களுடன் பேசுங்கள்.

பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான முடிவுகளில் மனநலம் தாக்கத்தை ஏற்படுத்துமா?

ஒருவருக்கு அதிகமான கவலை, மனச்சோர்வு, தனிமை அல்லது நம்பிக்கையின்மை ஏற்படும்போது தெளிவாகச் சிந்திப்பதற்கும், தனது எல்லைகளை வெளிப்படுத்துவதற்கும் அல்லது உதவி கோருவதற்கும் சிரமம் ஏற்படலாம். சிலர் ஆபத்தான முடிவுகளை எடுக்கலாம், தங்களுக்கு உண்மையில் விருப்பமில்லாத ஒன்றுக்கு சம்மதிக்கலாம் அல்லது கடினமான உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.

மனநலப் பிரச்சினை இருப்பதால் ஒருவர் பொறுப்பற்றவராகவோ “கெட்ட” நபராகவோ மாறிவிடுவதில்லை. இதன் பொருள், அவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும் அவர்களைத் தீர்ப்பிடுவதற்குப் பதிலாகவும், அவர்களுக்குப் பரிவும் சரியான தகவல்களும் ஆதரவும் சுகாதாரச் சேவைகளும் தேவை என்பதாகும்.

பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கிய அனுபவங்களும் மனநலமும்

பாலியல் மற்றும் இனப்பெருக்க வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் நமது மனநலத்தைப் பாதிப்பதுபோல, நமது மனநிலையும் பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான முடிவுகளைப் பாதிக்கிறது.

திட்டமிடப்படாத கர்ப்பம், கர்ப்பமாகிவிட்டோமா என்ற பயம், பாலியல் ரீதியாகப் பரவும் தொற்று, காதல் உறவில் ஏற்படும் வன்முறை, சமூகப் பாலினம் மற்றும் பாலியல் நாட்டம் காரணமாக ஏற்படும் பாகுபாடு போன்றவை பயம், வெட்கம், துக்கம் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

சரியான தகவல்கள் இல்லாததால் இந்தப் பயமும் கவலையும் மேலும் அதிகரிக்கலாம். பெரியவர்கள் அல்லது சுகாதாரப் பணியாளர்கள் தங்களைத் தீர்ப்பிடுவார்கள் என்ற பயத்தால், உங்களைப் போன்ற இளம்பருவத்தினர் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் கேள்விகளைக் கேட்பதற்கும் தயங்கலாம். வயதுக்குப் பொருத்தமான சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் மனநலத்தையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.

AI ஆலோசனை மூலம் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுதல்

உங்களுக்கு சோகம், பயம் அல்லது தனிமை ஏற்படும் நேரத்தில் AI chatbot உடன் பேசுவது எளிதானதாகத் தோன்றலாம்.

AI மூலம் உங்கள் எண்ணங்களை ஒழுங்குபடுத்தி எழுதவும், அமைதியடைவதற்கான பொதுவான முறைகளைக் கற்றுக்கொள்ளவும் அல்லது ஆலோசகரிடம் கேட்க வேண்டிய கேள்விகளைத் தயாரிக்கவும் உதவி கிடைக்கலாம்.

ஆனால் AI chatbot என்பது உண்மையான ஆலோசகரோ, உளவியலாளரோ அல்லது மருத்துவரோ அல்ல. அதற்கு உணர்வுகள் கிடையாது. நீங்கள் கூறுவதை ஒரு மனிதரைப் போலப் புரிந்துகொள்ளவும் முடியாது.

AI ஆலோசகர்கள் தவறான ஆலோசனைகளை உண்மையைப் போல வழங்கக்கூடும்

AI வழங்கும் பதில் நம்பகமான விதத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அது தவறாக இருக்கலாம். உங்களுக்கு இல்லாத மனநலப் பிரச்சினை இருப்பதாகக் கூறலாம் அல்லது பாதுகாப்பற்ற ஆலோசனைகளை வழங்கலாம்.

AI கூறுவதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நோயைக் கண்டறியவோ மருந்துகள் தொடர்பாக முடிவுகளை எடுக்கவோ வேண்டாம்.

AI ஆலோசகர்களால் கடுமையான ஆபத்துகளை அடையாளம் காண முடியாமல் போகலாம்

பயிற்சி பெற்ற ஆலோசகர் ஒருவர் உங்கள் சொற்கள், குரல் மற்றும் நடத்தையைக் கருத்தில் கொண்டு உங்களுக்கு உடனடி ஆதரவு தேவையா என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

AI chatbot ஆல் உங்களுக்கு இருக்கும் ஆபத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். அல்லது உங்கள் ஆபத்தை அது கவனிக்காமல் விட்டுவிடலாம். உங்களுக்குத் தீங்கு விளைவித்துக்கொள்ளும் எண்ணங்கள் இருந்தால், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகினால் அல்லது அவசர ஆபத்தில் இருந்தால், AI ஆல் உங்களிடம் நேரில் வரவோ உங்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லவோ முடியாது.

AI chatbot இல் உள்ளிடும் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் இரகசியமாக இருக்காமல் போகலாம்

AI chatbot இல் நீங்கள் எழுதும் தகவல்களை அந்தச் செயலி அல்லது நிறுவனம் பிற நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடும். அதேபோல், தமது அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் நீங்கள் வழங்கும் தகவல்களைப் பயன்படுத்தலாம்.

எனவே, உங்கள் முழுப் பெயர், முகவரி அல்லது பாடசாலையின் பெயர், தொலைபேசி இலக்கங்கள், கடவுச்சொற்கள், வங்கிக் கணக்குத் தகவல்கள், மருத்துவ அறிக்கைகள் போன்றவற்றை AI chatbot களில் உள்ளிட வேண்டாம்.

AI மீது அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வைக்கத் தூண்டப்படலாம்

AI எப்போதும் உங்களுடன் உடன்பட்டு, பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருக்கும் “சிறந்த நண்பர்” போலத் தோன்றலாம். இதனால் உண்மையான மனிதர்களுடன் பேசுவது குறையலாம். AI இல்லாமல் முடிவுகளை எடுப்பதும் கடினமாகலாம்.

மனித ஆலோசகருடன் உரையாடும்போது அவர் உங்கள் பாதுகாப்பைப் பொறுப்புடன் கருத்தில் கொள்கிறார். AI க்கு அந்தப் பொறுப்பு இல்லை. தவறான தகவல் அல்லது ஆலோசனை வழங்கப்பட்டாலும் அதற்குத் தொடர்புடைய நிறுவனம் பொறுப்பேற்காமல் இருக்கலாம்.

AI chatbot உங்கள் தீங்கு விளைவிக்கும் எண்ணங்களுடன் உடன்படக்கூடும்

சில AI chatbot கள் பயனரை மகிழ்விப்பதற்காக அவர் கூறும் விடயங்களுடன் எளிதில் உடன்படுகின்றன. இதனால் உங்களிடம் இருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய எண்ணத்தைச் சவாலுக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக, அதை AI உறுதிப்படுத்தக்கூடும்.

AI chatbot உங்கள் வாழ்க்கையின் முழுப் பின்னணியையும் புரிந்துகொள்வதில்லை

இலங்கையின் குடும்ப உறவுகள், பாடசாலைச் சூழல், மொழி, மதம் அல்லது கலாசார விடயங்களை AI சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். சில பதில்களில் பக்கச்சார்பான கருத்துகள் அல்லது நியாயமற்ற அடையாளப்படுத்தல்கள் இருக்கலாம்.

AI ஆலோசகரைப் பாதுகாப்பாக எவ்வாறு பயன்படுத்துவது?

  • உங்களுக்கு ஏற்படும் உணர்வுகளை எழுதி ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள்.
  • அமைதியடைவதற்கான சில பொதுவான முறைகளைக் கண்டறியுங்கள்.
  • நம்பகமான வயது வந்த ஒருவருடன் உரையாடலைத் தொடங்குவதற்கான சொற்களைத் தயாரித்துக்கொள்ளுங்கள்.
  • ஆலோசகரிடமோ மருத்துவரிடமோ கேட்க வேண்டிய கேள்விகளை எழுதிக்கொள்ளுங்கள்.
  • பொதுவான மனநலத் தகவல்களைத் தேடுவதற்கு AI chatbot ஐப் பயன்படுத்தலாம்.

ஆனால், மனித ஆலோசகர் அல்லது நண்பருக்குப் பதிலாக AI chatbot ஐப் பயன்படுத்த வேண்டாம்.

AI உங்களைத் தீங்கு விளைவிக்கும் ஒன்றைச் செய்யுமாறு, யாரிடமும் கூற வேண்டாம் என்று, மற்றவர்களிடமிருந்து விலகியிருக்குமாறு அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கூறினால், உரையாடலை நிறுத்திவிட்டு நம்பகமான வயது வந்த ஒருவரிடம் கூறுங்கள்.

அவசர உதவி தேவைப்பட்டால்

உங்களுக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ தீங்கு விளைவிக்க வேண்டும் என்று நினைத்தால், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகினால் அல்லது இந்த நேரத்தில் ஆபத்தில் இருந்தால், AI உடன் மட்டுமே பேசிக்கொண்டிருக்க வேண்டாம்.

உங்கள் தாய், தந்தை, பாதுகாவலர், நம்பகமான ஆசிரியர் அல்லது வேறு பாதுகாப்பான வயது வந்த ஒருவரிடம் உடனடியாகக் கூறுங்கள். தேவைப்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுங்கள் அல்லது அவசர சேவையைத் தொடர்புகொள்ளுங்கள். எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்க்கை மதிப்புமிக்கது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

AI உங்களுக்குத் தகவல்களை வழங்க முடியும். ஆனால் உங்களுக்குச் செவிசாய்த்து, உங்களைப் புரிந்துகொண்டு, உங்களைப் பாதுகாப்பதற்கு உண்மையான மனித ஆதரவு அவசியம்.