இணையம் என்பது குழந்தைகளின் வாழ்க்கையின் ஒரு சாதாரண பகுதியாகும். அவர்கள் கற்றுக்கொள்வதற்கும், நண்பர்களுடன் தொடர்புகொள்வதற்கும், விளையாடுவதற்கும், படைப்புகளை உருவாக்குவதற்கும், தங்களுக்குப் பிடித்த விடயங்களைத் தேடிக் கண்டறிவதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இணையத்தில் துன்புறுத்தல், மோசடி, பாலியல் சுரண்டல், போலிக் கணக்குகள், தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுதல் மற்றும் நிர்வாணப் புகைப்படங்களைக் காட்டி அச்சுறுத்துதல் போன்ற ஆபத்துகளும் உள்ளன.
குழந்தையைப் பாதுகாப்பது என்பது இணையத்தை முழுமையாகத் தடை செய்வதோ அல்லது அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் தொலைபேசியைச் சோதனை செய்வதோ அல்ல. மிக முக்கியமான பாதுகாப்பு என்னவென்றால், ஏதேனும் பிரச்சினை ஏற்படும்போது:
“என்னால் அம்மாவிடமோ, அப்பாவிடமோ அல்லது என்னைப் பராமரிக்கும் ஒருவரிடமோ இதைப் பற்றிப் பயமின்றிக் கூற முடியும்”
என்ற நம்பிக்கையை குழந்தையிடம் உருவாக்குவதாகும்.
இணையம் வழியாக இடம்பெறும் பாலின அடிப்படையிலான வன்முறையின் வகைகள்
இணையம் வழியாக இடம்பெறும் பாலின அடிப்படையிலான வன்முறை பல்வேறு வடிவங்களில் நிகழலாம். இவ்வாறான ஒவ்வொரு வகையான வன்முறையும் இலக்காக்கப்படும் நபருக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
இத்தகைய வன்முறைகள் பெரும்பாலும் ஒருவரின் பாலினம், பாலியல் தன்மை, பாலியல் நோக்குநிலை, இனம், மாற்றுத்திறன் அல்லது வேறு அடையாளத்தை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, பெண் குழந்தைகள், LGBTIQA+ குழந்தைகள், மாற்றுத்திறனுள்ள குழந்தைகள் மற்றும் சமூகத்தில் பாகுபாட்டுக்கு உள்ளாகும் பிற குழந்தைகள் அதிக ஆபத்துகளை எதிர்கொள்ளக்கூடும்.
- அனுமதியின்றிப் பாலியல் புகைப்படங்களை அனுப்புதல் [Cyberflashing]
ஒருவரின் அனுமதியின்றி அவர்களுக்குப் பாலியல் உறுப்புகள், நிர்வாணம் அல்லது பாலியல் செயல்களைக் காட்டும் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை அனுப்புவது Cyberflashing எனப்படுகிறது.
இத்தகைய உள்ளடக்கத்தைப் பெறுவதால் குழந்தை பயம், வெட்கம், அசௌகரியம் அல்லது அதிர்ச்சிக்கு உள்ளாகலாம். அவற்றைக் கேட்காமலேயே அனுப்பிப் பெற்றிருந்தால், அவற்றைப் பெற்றது குழந்தையின் தவறு அல்ல.
2. இணையம் வழியாகப் பின்தொடர்தல் [Cyberstalking]
டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரின் செயல்பாடுகளைக் கண்காணித்தல், அவர்கள் இருக்கும் இடங்களைக் கண்டறிதல் அல்லது மீண்டும் மீண்டும் அவர்களுடன் தொடர்புகொள்ள முயற்சித்தல் Cyberstalking எனப்படுகிறது.
இதில் பின்வருவன அடங்கலாம்:
- குழந்தையின் சமூக ஊடகக் கணக்குகளை அடிக்கடி சோதனை செய்தல்
- குழந்தை தன்னைத் தடுத்த பின்னர் புதிய கணக்குகளை உருவாக்கி மீண்டும் தொடர்புகொள்ளுதல்
- அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிதல்
- அவர்களைப் பற்றிய தகவல்களை நண்பர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுதல்
- அவர்கள் செல்லும் இடங்களைத் தெரிந்திருப்பதாகக் கூறி அச்சுறுத்துதல்
- தொலைபேசியில் கண்காணிப்புச் செயலியை இரகசியமாக நிறுவுதல் போன்ற செயல்கள்.
இது ஒரு உறவுக்குள் இடம்பெறும் துஷ்பிரயோகத்தின் ஒரு பகுதியாகவும் பயன்படுத்தப்படலாம். இத்தகைய சூழலில், துஷ்பிரயோகம் செய்பவரிடமிருந்து விலக முயற்சிக்கும் ஒருவரைக் கட்டுப்படுத்துவதற்கோ அச்சுறுத்துவதற்கோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
3. இரகசியமாகப் புகைப்படங்கள் அல்லது காணொளிகளைப் பதிவு செய்தல் [Digital voyeurism]
ஒருவரின் அனுமதியின்றி அவர்களின் உடலைப் புகைப்படம் எடுத்தல், காணொளி பதிவு செய்தல், இரகசியமாகப் பார்த்தல் அல்லது இணையத்தில் பகிர்தல் Digital voyeurism எனப்படுகிறது.
இது பின்வரும் வழிகளில் இடம்பெறலாம்:
- மறைத்து வைக்கப்பட்ட கமெராவைப் பயன்படுத்துதல்
- ஆடைகளை மாற்றும் இடத்தில் இரகசியமாகக் காணொளி பதிவு செய்தல்
- அனுமதியின்றி காணொளி அழைப்பைப் பதிவு செய்தல்
- தொலைபேசியிலிருந்து தனிப்பட்ட புகைப்படங்களைத் திருடுதல்
- அத்தகைய புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்புதல்.
ஒருவரின் சாதாரண புகைப்படத்தை AI அல்லது வேறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றி, அவர்கள் நிர்வாணமாக இருப்பது போன்றோ பாலியல் செயல்களில் ஈடுபடுவது போன்றோ காட்டும் போலியான புகைப்படம் அல்லது காணொளியை உருவாக்குவதும் இதனுடன் தொடர்புடையதாகும்.
4. தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துதல் [Doxing]
ஒருவரின் அனுமதியின்றி அவர்களின் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிடுவது Doxing எனப்படுகிறது.
இதில் பின்வருவன அடங்கலாம்:
- வீட்டின் முகவரி
- தொலைபேசி இலக்கம்
- பாடசாலையின் பெயர்
- வேலை செய்யும் இடம்
- குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய தகவல்கள்
- குழந்தை அடிக்கடி செல்லும் இடங்கள்
- தனிப்பட்ட புகைப்படங்கள் போன்ற தகவல்கள்.
இத்தகைய தகவல்களை வெளியிடுவதன் நோக்கம், மற்றவர்கள் அந்தக் குழந்தைக்குச் செய்திகளை அனுப்பவும், அச்சுறுத்தவும், துன்புறுத்தவும் அல்லது நிஜ வாழ்க்கையில் தீங்கு விளைவிக்கவும் தூண்டுவதாக இருக்கலாம்.
5. பாலின அடிப்படையிலான வெறுப்புப் பேச்சு [Gender-based hate speech]
ஒருவரின் பாலியல் தன்மை, பாலினம் அல்லது பாலியல் நோக்குநிலையை இலக்காகக் கொண்டு அவர்களை அவமதித்தல், வெட்கப்படுத்துதல், அச்சுறுத்துதல் அல்லது தாழ்வாக நடத்துதல் பாலின அடிப்படையிலான வெறுப்புப் பேச்சு எனப்படுகிறது.
இது கருத்துகள் (comments), செய்திகள் (messages), மீம்கள் (memes), காணொளிகள் (videos), குரல் செய்திகள் (voice messages) அல்லது சமூக ஊடகப் பதிவுகள் (social media posts) வழியாக இடம்பெறலாம்.
இதில் பின்வருவன அடங்கலாம்:
- பாலியல் ரீதியான அவமதிப்புகள்
- பெண் குழந்தைகள் அல்லது LGBTIQA+ குழந்தைகளைத் தாழ்வாகக் காட்டும் கருத்துகள்
- “நல்லதுதான் நடந்தது” என்று கூறி வன்முறையை நியாயப்படுத்துதல்
- ஒருவர் தமக்குத் தாமே தீங்கு விளைவித்துக்கொள்ளுமாறு கூறுதல்
- பாலியல் அல்லது உடல்ரீதியான வன்முறையில் ஈடுபடுவதாக அச்சுறுத்துதல் போன்றவை.
6. மற்றொருவராக நடித்து போலிக் கணக்குகளை உருவாக்குதல் [Identity theft, impersonation and fake profiles]
ஒருவரின் பெயர், புகைப்படங்கள் அல்லது வேறு தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி அவரைப் போல நடிப்பது அல்லது போலியான கணக்கை உருவாக்குவது இதில் அடங்கும்.
அத்தகைய கணக்கைப் பயன்படுத்தி:
- குழந்தையை அவமதிக்கும் வகையில் பதிவுகளை வெளியிடுதல்
- குழந்தையின் பெயரில் மற்றவர்களுக்குச் செய்திகள் அனுப்புதல்
- அவர்களின் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடம் பணம் கேட்டல்
- குழந்தை பாலியல் சேவைகளை வழங்குவதாகப் போலியான விளம்பரங்களை வெளியிடுதல்
- குழந்தையின் முகவரி அல்லது தொலைபேசி இலக்கத்தை வெளியிடுதல்
- அவர்களின் உறவுகளைச் சீர்குலைக்க முயற்சித்தல் போன்ற செயல்கள் இடம்பெறலாம்.
7. புகைப்படங்களை மாற்றிப் போலியான பாலியல் படங்களை உருவாக்குதல் [Morphing and deepfakes]
சாதாரண புகைப்படங்கள் அல்லது காணொளிகளை வெட்டுதல், ஒன்றாக இணைத்தல் அல்லது AI போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரின் போலியான நிர்வாண அல்லது பாலியல் புகைப்படத்தை உருவாக்குவது Morphing அல்லது Deepfake உருவாக்கம் எனப்படுகிறது.
இத்தகைய போலியான புகைப்படங்கள் அல்லது காணொளிகள்:
- குழந்தையை வெட்கப்படுத்துவதற்கு
- அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்கு
- அச்சுறுத்துவதற்கு
- பணம் அல்லது மேலும் புகைப்படங்களைப் பெறுவதற்கு
- ஆபாச இணையத்தளங்களில் வெளியிடுவதற்குப் பயன்படுத்தப்படலாம்.
புகைப்படம் போலியானதாக இருந்தாலும், அதனால் குழந்தைக்கு ஏற்படும் பயம், வெட்கம் மற்றும் மனரீதியான பாதிப்பு உண்மையானவை.
8. நெருக்கமான அல்லது நிர்வாணப் புகைப்படங்களை அனுமதியின்றிப் பகிர்தல்
ஒருவரின் அனுமதியின்றி அவர்களின் நிர்வாண, அரை நிர்வாண அல்லது பாலியல் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது குரல் பதிவுகளை மற்றவர்களுக்கு அனுப்புதல் அல்லது இணையத்தில் வெளியிடுதல் இதில் அடங்கும்.
புகைப்படம் முதலில் விருப்பத்துடன் அனுப்பப்பட்டிருந்தாலும், அதனை மற்றவர்களுடன் பகிர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அதற்குப் பொருளல்ல.
புகைப்படம் அல்லது காணொளியைப் பகிர்வதாக அச்சுறுத்தி:
- பணம்
- மேலும் புகைப்படங்கள்
- பாலியல் செயல்
- உறவைத் தொடர்ந்து பேணுதல்
- வேறு கோரிக்கைகளை வலுக்கட்டாயமாக நிறைவேற்றிக்கொள்ள முயற்சித்தல் போன்றவையும் இதில் அடங்கும்.
9. இணையம் வழியாகக் குழந்தையை ஏமாற்றி நெருங்குதல் [Online grooming]
இணையம் அல்லது வேறு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தையின் நம்பிக்கையைப் பெற்று, பின்னர் அவர்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதற்கோ சந்திப்பதற்கோ முயற்சிப்பது Online grooming எனப்படுகிறது.
இதைச் செய்யும் நபர்:
- குழந்தையின் வயதுக்கு ஒத்த வயதுடையவர் போல நடிக்கலாம்
- குழந்தையின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் ஒரே நபர் தான்தான் எனக் காட்டலாம்
- அன்பு அல்லது விசேட கவனத்தை வெளிப்படுத்தலாம்
- பரிசுகள், பணம் அல்லது தொலைபேசி ரீலோட் வழங்கலாம்
- பெற்றோரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் இந்தத் தொடர்பை மறைக்கச் சொல்லலாம்
- தனிப்பட்ட அல்லது நிர்வாணப் புகைப்படங்களைக் கேட்கலாம்
- குழந்தையை நிஜ வாழ்க்கையில் சந்திக்க முயற்சிக்கலாம்.
10. இணையவழிப் பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்
செய்திகள், மின்னஞ்சல்கள், அழைப்புகள், கருத்துகள், காணொளி அழைப்புகள் அல்லது நேரடிச் செய்திகள் வழியாகப் பாலியல் கருத்துகள், கேள்விகள், புகைப்படங்கள் அல்லது அச்சுறுத்தல்களை அனுப்புவது இணையவழிப் பாலியல் துன்புறுத்தல் எனப்படுகிறது.
இதில் பின்வருவன அடங்கலாம்:
- குழந்தையின் உடலைப் பற்றி பாலியல் கருத்துகளைத் தெரிவிப்பது
- நிர்வாணப் புகைப்படங்களைக் கேட்பது
- பாலியல் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை அனுப்புவது
- பாலியல் செயல்களில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுப்பது
- பாலியல் வல்லுறவு அல்லது வேறு பாலியல் வன்முறையில் ஈடுபடுவதாக அச்சுறுத்துவது
- பாலியல் வதந்திகளைப் பரப்புவது.
பலர் ஒன்றிணைந்து ஒருவரைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தினால், அது குழுவாக அல்லது வலையமைப்பு வழியாக இடம்பெறும் துன்புறுத்தல் (Networked harassment) எனப்படுகிறது.
11. இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் [Online threats and blackmail]
ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் அல்லது காணொளிகளை அவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது பொதுமக்களுடன் பகிர்வதாக அச்சுறுத்தி, ஏதேனும் கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்வது இணையவழி மிரட்டல் (Online blackmail) எனப்படுகிறது.
அச்சுறுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் புகைப்படம் அல்லது தகவல் உண்மையானதாகவோ AI மூலம் உருவாக்கப்பட்ட போலியானதாகவோ இருக்கலாம்.
அச்சுறுத்தும் நபர் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
- பணம் கேட்கலாம்
- மேலும் புகைப்படங்களைக் கேட்கலாம்
- பாலியல் செயல்களில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தலாம்
- உறவை முடித்துக்கொள்ள அனுமதிக்காமல் இருக்கலாம்
- முறைப்பாட்டைத் திரும்பப் பெறுமாறு கட்டாயப்படுத்தலாம்.
12. பாலியல் செயல்கள் அல்லது பாலியல் அனுகூலங்களைப் பெறுவதற்காக அச்சுறுத்துதல் [Sextortion]
ஒருவரின் நெருக்கமான அல்லது நிர்வாணப் புகைப்படங்கள் அல்லது காணொளிகளைப் பகிர்வதாக அச்சுறுத்தி, அவர்களிடமிருந்து பாலியல் செயல், மேலும் பாலியல் புகைப்படங்கள் அல்லது வேறு பாலியல் அனுகூலங்களைப் பெற முயற்சிப்பது Sextortion எனப்படுகிறது.
ஒரு குழந்தை இத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டால், அவரைக் குறை கூறாதீர்கள். பணம் செலுத்துவதாலோ மேலும் புகைப்படங்களை அனுப்புவதாலோ அச்சுறுத்தல் நிச்சயமாக நிறுத்தப்படும் என்பதில்லை. குழந்தையுடன் இருந்து, ஆதாரங்களைப் பாதுகாத்து, உடனடியாகப் பொருத்தமான உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
13. பாலியல் உள்ளடக்கத்தின் மூலம் பணம் சம்பாதித்தல் [Sexploitation]
ஒருவரின் அனுமதியின்றி அவர்களின் பாலியல் அல்லது நெருக்கமான உள்ளடக்கத்தைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பது Sexploitation எனப்படுகிறது.
இதில் பின்வருவன அடங்கலாம்:
- நிர்வாண அல்லது பாலியல் புகைப்படங்களை ஆபாச இணையத்தளங்களுக்கு விற்பனை செய்தல்
- இரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட காணொளிகளைப் பணத்திற்குப் பகிர்தல்
- ஒருவருக்குத் தெரியாமல் நேரலை ஒளிபரப்பு செய்தல்
- AI பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான பாலியல் புகைப்படங்களை விற்பனை செய்தல்.
14. இணையக் கூட்டங்களுக்குள் அத்துமீறி நுழைந்து தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் காட்டுதல் [Zoom bombing]
இணையவழி வகுப்பு, கூட்டம் அல்லது வேறு இணையக் கூட்டத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து, பங்கேற்பாளர்களைப் பயமுறுத்துவதற்கோ அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதற்கோ பின்வருவனவற்றைக் காட்டுவது Zoom bombing எனப்படுகிறது:
- பாலியல் அல்லது ஆபாச உள்ளடக்கங்கள்
- இனவாதக் கருத்துகள்
- பாலின அடிப்படையிலான அவமதிப்புகள்
- மதம் சார்ந்த அல்லது வேறு வெறுப்புப் பேச்சுகள்
- அச்சுறுத்தும் ஒலிகள் அல்லது காட்சிகள்.
இது Zoom செயலியில் மட்டுமல்லாமல், எந்தவொரு இணையக் கூட்டம் அல்லது இணையவழி வகுப்புத் தளத்திலும் இடம்பெறலாம்.
பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம்
இத்தகைய சம்பவம் ஒன்றை உங்கள் குழந்தை உங்களிடம் தெரிவித்தால், முதலில் அவர்களுக்குச் செவிசாயுங்கள். அவர்களைக் குறை கூறாதீர்கள். தொலைபேசியைப் பறிப்பது அல்லது தண்டிப்பது பற்றி முடிவெடுப்பதற்கு முன்பு குழந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.
குழந்தையிடம் இவ்வாறு கூறுங்கள்:
“இதைப் பற்றி என்னிடம் கூறியது மிகவும் முக்கியமானது. இது உன்னுடைய தவறு அல்ல. நாம் இதை ஒன்றாக எதிர்கொள்வோம்.”
தனக்கு நடந்ததை மறைத்து வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகக் குழந்தை உணர்ந்தால், வன்முறையில் ஈடுபடுபவரின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும். குழந்தை பயமின்றி உங்களிடம் வர முடிவது அவர்களுக்கான மிக முக்கியமான பாதுகாப்புகளில் ஒன்றாகும்.
மேலும் வாசிக்க – Youth-Toolkit_14-Dec_compressed-final
உங்கள் குழந்தை இணையவழித் துன்புறுத்தலை எதிர்கொண்டால் எவ்வாறு உதவுவது?
உங்கள் குழந்தை இணையம் வழியாகத் துன்புறுத்தல், பாலியல் அச்சுறுத்தல் அல்லது மிரட்டிப் பணம் பறித்தல் போன்றவற்றை எதிர்கொள்வதாகக் கூறினால், உங்கள் முதல் எதிர்வினை மிகவும் முக்கியமானது. குழந்தையைக் குறை கூறுதல், கத்துதல் அல்லது தொலைபேசியைப் பறித்தல் போன்ற செயல்கள் அவர்களை மேலும் பயமுறுத்தி, நடந்த சம்பவத்தை மறைக்கச் செய்யலாம்.
முதலில் குழந்தைக்குச் செவிசாயுங்கள்
குழந்தையிடம் இவ்வாறு கூறுங்கள்:
“இதைப் பற்றி என்னிடம் கூறியது மிகவும் முக்கியமானது.”
“இது உன்னுடைய தவறு அல்ல.”
“நான் உன்னைக் குறை கூறமாட்டேன்.”
“நாம் இதை ஒன்றாக எதிர்கொள்வோம்.”
“உன்னைப் பாதுகாப்பதே எனது முதல் கடமை.”
“ஏன் அந்த நபரை நம்பினாய்?”, “ஏன் புகைப்படத்தை அனுப்பினாய்?” அல்லது “நான் ஏற்கெனவே சொன்னேனே!” போன்ற கேள்விகளை முதலில் கேட்காதீர்கள். நடந்ததைப் புரிந்துகொள்வதற்காகப் பின்னர் அமைதியாகப் பேசலாம்.
குழந்தை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளுங்கள்
அச்சுறுத்தும் நபருக்கு குழந்தையைத் தெரியுமா?
குழந்தையின் வீடு, பாடசாலை அல்லது இருப்பிடம் அவருக்குத் தெரியுமா?
குழந்தையைச் சந்திக்க முயற்சிக்கிறாரா?
குழந்தைக்கோ குடும்ப உறுப்பினருக்கோ உடல்ரீதியான தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்துகிறாரா?
குழந்தை கடுமையான பயம் அல்லது அதிர்ச்சியில் இருக்கிறதா, அல்லது தனக்குத் தானே தீங்கு விளைவித்துக்கொள்ளும் ஆபத்தில் இருக்கிறதா?
ஆபத்து இருந்தால் குழந்தையைத் தனியாக விட்டுவிடாதீர்கள். 119 என்ற இலக்கத்துக்கு அழைக்கவும் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் செல்லவும். அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் 1990 சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவையை அழைக்கவும்.
ஆதாரங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
கணக்கைத் தடுக்கவோ (block) செய்திகளை நீக்கவோ முன்பு:
- அச்சுறுத்தும் செய்திகளின் திரைப்பிடிப்புகளை (screenshots) எடுக்கவும்.
- பயனர்பெயர் (username), சுயவிவரப் பெயர் (profile name) மற்றும் கணக்கின் இணைப்பை (account link) பதிவு செய்யவும்.
- சம்பவம் நடந்த திகதி மற்றும் நேரத்தைப் பதிவு செய்யவும்.
- பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி மற்றும் தளத்தின் பெயரைப் பதிவு செய்யவும்.
- பணம் கேட்கப்பட்டிருந்தால், பணப்பரிமாற்ற விவரங்களைப் பதிவு செய்யவும்.
குழந்தையின் நிர்வாண அல்லது பாலியல் புகைப்படத்தைப் பதிவிறக்கவோ, திரைப்பிடிப்பு எடுக்கவோ, மற்றவர்களுக்கு அனுப்பவோ அல்லது வேறு ஒருவருக்குக் காட்டவோ வேண்டாம். ஆதாரங்களாகப் பாதுகாக்க வேண்டியது அச்சுறுத்தல்கள், பயனர்பெயர்கள் மற்றும் இணைப்புகள் போன்றவையே; குழந்தையின் நிர்வாணப் புகைப்படத்தை மீண்டும் பகிர்வது அல்ல.
நிர்வாணப் புகைப்படத்தைக் காட்டி அச்சுறுத்தினால்
அச்சுறுத்தும் நபர்:
- பணம் கேட்கலாம்
- மேலும் புகைப்படங்களைக் கேட்கலாம்
- பாலியல் செயலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தலாம்
- குழந்தையின் பெற்றோரிடம் அல்லது நண்பர்களிடம் கூறிவிடுவதாக அச்சுறுத்தலாம்.
இத்தகைய சூழலில் பணம் செலுத்தவோ மேலும் புகைப்படங்களை அனுப்பவோ வேண்டாம். கோரிக்கையை நிறைவேற்றினாலும் அச்சுறுத்தல் நிறுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
குழந்தை முதலில் விருப்பத்துடன் புகைப்படத்தை அனுப்பியிருந்தாலும், அதனை மற்றவர்களுடன் பகிர்வதற்கு அனுமதி அளித்துள்ளது என்று பொருளல்ல. அச்சுறுத்துவதற்கும் அனுமதியின்றிப் பகிர்வதற்குமான பொறுப்பு அவ்வாறு செய்பவரிடமே உள்ளது.
குழந்தை உங்களிடம் பயப்படக் கூடாது
இணையவழி வன்முறையில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் “இதை உன் அப்பாவிடம் சொல்லிவிடுவேன்”, “அம்மாவுக்குக் காட்டிவிடுவேன்” அல்லது “பாடசாலையில் இருப்பவர்களுக்கு அனுப்பிவிடுவேன்” என்று அச்சுறுத்துவார்கள். பெற்றோரின் எதிர்வினைக்கு குழந்தை பயந்தால், அந்தப் பயம் அச்சுறுத்துபவரின் அதிகாரமாக மாறிவிடும்.
எனவே, உங்கள் குழந்தையிடம் முன்கூட்டியே இவ்வாறு கூறுங்கள்:
“யாராவது ஒரு புகைப்படம் அல்லது காணொளியைக் காட்டி, இதை என்னிடம் சொல்லிவிடுவதாக அச்சுறுத்தினாலும், நீ முதலில் என்னிடம் சொல்லலாம். நான் உன்னைத் தாக்கவோ அவமதிக்கவோ மாட்டேன். நாம் இதைப் பாதுகாப்பாகத் தீர்ப்போம்.”
உங்களுடைய ஆதரவு தமக்கு இருக்கிறது என்பதை குழந்தை புரிந்துகொள்ளும்போது, அச்சுறுத்துபவரால் குழந்தையைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும்.
கணக்கைப் பாதுகாத்து, சம்பவத்தைப் புகாரளியுங்கள்
ஆதாரங்களைப் பாதுகாத்த பின்னர்:
- சம்பந்தப்பட்ட செய்தி, பதிவு மற்றும் கணக்கை அந்தத் தளத்திடம் புகாரளிக்கவும்.
- அச்சுறுத்தும் கணக்கைத் தடுக்கவும் (block).
- கடவுச்சொற்களை மாற்றவும்.
- இரு-காரணி அங்கீகாரத்தை (Two-Factor Authentication) செயல்படுத்தவும்.
- தனியுரிமை அமைப்புகள் மற்றும் இருப்பிடப் பகிர்வு அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
- தேவைப்பட்டால், போலிக் கணக்குகள் தொடர்பாகக் குழந்தையின் நண்பர்களுக்குச் சுருக்கமான அறிவிப்பை வழங்கவும்.
இலங்கையில் உதவி பெறக்கூடிய இடங்கள்
1929 – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 18 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு இடம்பெறும் துஷ்பிரயோகம் அல்லது இணையவழிப் பாலியல் வன்முறை தொடர்பாகப் புகாரளிக்க.
109 – பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பணியகம்.
011 244 4444 – பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம்.
cwb.online@police.gov.lk – இணையம் வழியாகப் புகார் அளிப்பதற்கு.
101 – Sri Lanka CERT: தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டலுக்கு. சமூக ஊடகச் சம்பவங்களை அவர்களின் அதிகாரப்பூர்வ Incident Reporting Portal வழியாகப் புகாரளிக்கவும்.
சம்பவத்திற்குப் பின்னரும் குழந்தையுடன் இருங்கள்
புகாரளித்துவிட்டதால் மட்டும் குழந்தையின் பயம், வெட்கம் அல்லது கவலை உடனடியாக மறைந்துவிடாது. அவர்களின் தூக்கம், உணவு உட்கொள்ளுதல், பாடசாலைக்குச் செல்லுதல், நண்பர்களிடமிருந்து விலகியிருத்தல் மற்றும் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா என்பதைக் கவனியுங்கள்.
நடந்த சம்பவத்தை மீண்டும் மீண்டும் விவரிக்குமாறு குழந்தையை வற்புறுத்தாதீர்கள். குழந்தையின் விருப்பமின்றி அந்தச் சம்பவத்தை உறவினர்களிடமோ மற்றவர்களிடமோ கூறாதீர்கள். தேவைப்பட்டால் குழந்தையின் விருப்பத்துடன் ஆலோசகர் அல்லது மனநல நிபுணரின் உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
மிக முக்கியமான விடயம் இதுதான்:
குழந்தை ஒரு பிரச்சினையுடன் உங்களிடம் வரும்போது, தண்டிப்பதற்கு முன்பு அவர்களைப் பாதுகாக்குங்கள்.
“மனோஸ்பியர்” என்றால் என்ன? பெற்றோர்கள் ஏன் இதில் கவனம் செலுத்த வேண்டும்?
இணையம் கற்றுக்கொள்வதற்கும் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்வதற்கும் உதவினாலும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வெறுப்பு, துஷ்பிரயோகம் மற்றும் பெண்களை வெறுக்கும் கருத்துகளைப் பரப்புவதற்கும் அது பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய கருத்துகளைப் பரப்பும் முக்கியமான இணைய வலையமைப்புகளில் ஒன்றாக “மனோஸ்பியர்” (Manosphere) அறியப்படுகிறது.
மனோஸ்பியர் என்றால் என்ன?
மனோஸ்பியர் என்பது ஆணாக இருப்பதன் அர்த்தத்தை மிகவும் குறுகிய மற்றும் ஆக்கிரமிப்பான முறையில் முன்வைக்கும் இணையச் சமூகங்களின் தொகுப்பாகும். பெண்ணியம் மற்றும் பாலினச் சமத்துவம் ஆண்களின் உரிமைகளுக்குத் தீங்கு விளைவித்துள்ளதாக இந்தச் சமூகங்கள் தவறான கருத்தைப் பரப்புகின்றன.
ஒரு ஆணின் மதிப்பு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல், செல்வம், உடல் தோற்றம் மற்றும் குறிப்பாகப் பெண்கள் மீது அதிகாரம் செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாக இங்கு கற்பிக்கப்படுகிறது. சமூக ஊடகங்கள், பாட்காஸ்ட்கள், இணையவழி விளையாட்டுகள் மற்றும் டேட்டிங் செயலிகள் உள்ளிட்ட பல டிஜிட்டல் இடங்களில் இந்தக் கருத்துகள் பரவியுள்ளன.
இளம் ஆண் குழந்தைகள் இந்தக் கருத்துகளால் ஈர்க்கப்படுவது ஏன்?
தனிமை, பதற்றம் அல்லது சமூகத்திலிருந்து விலக்கப்பட்டிருப்பது போன்ற உணர்வுகளைக் கொண்ட இளைஞர்கள் இத்தகைய உள்ளடக்கங்களால் எளிதில் ஈர்க்கப்படலாம். உடற்தகுதி, காதல் உறவுகள், பணம் அல்லது சுய முன்னேற்றம் தொடர்பான ஆலோசனைகளைத் தேடும்போது அவர்கள் மனோஸ்பியர் செல்வாக்காளர்களைச் சந்திக்க நேரிடலாம்.
இந்தச் செல்வாக்காளர்கள் தனிப்பட்ட பொறுப்புணர்வையும் வெற்றியையும் கற்பிப்பதாகக் காட்டிக்கொண்டாலும், பல நேரங்களில் இளம் ஆண்களின் பிரச்சினைகளுக்குப் பெண்களும் பெண் குழந்தைகளும் பெண்ணியமும் பொறுப்பானவை என்று அவர்களை நம்ப வைக்கிறார்கள்.
மனோஸ்பியர் பெண்களை எவ்வாறு சித்தரிக்கிறது?
பல மனோஸ்பியர் சமூகங்கள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வெறுப்பு மற்றும் பாரபட்சமான கருத்துகளின் அடிப்படையில் ஒன்றிணைந்துள்ளன. அவை தவறான நம்பிக்கைகள், அறிவியல் சார்ந்தவை போலத் தோன்றும் போலியான கூற்றுகள் மற்றும் பாலினம் தொடர்பான தவறான தகவல்களைப் பரப்புகின்றன.
“இன்செல்” (Incel) குழுக்கள், ஆண்களுக்குப் பாலியல் உறவுகளைப் பெறுவதற்கான உரிமை இருப்பதாகவும், பெண்கள் வேண்டுமென்றே அதனைத் தடுக்கிறார்கள் என்றும் கூறுகின்றன.
“ஆண்களின் உரிமைச் செயற்பாட்டாளர்கள்” (Men’s rights activists), பெண்ணியமும் பெண்களின் உரிமைகளும் ஆண்களுக்குத் தீங்கு விளைவிப்பதாகக் கூறுகின்றனர்.
“பிக்கப் ஆர்ட்டிஸ்ட்” (Pickup artist) குழுக்கள், பெண்களைப் பாலியல் உறவுகளுக்கு இணங்கச் செய்வதற்கான அல்லது பெண்களை ஏமாற்றுவதற்கான வழிகளைக் கற்பிக்கின்றன. அவை பாலியல் விருப்பத்தையும் சம்மதத்தையும் அவமதிக்கின்றன.
“ரெட் பில்” (Red Pill) கருத்துகள், உலகம் பெண்களுக்கே அதிக நன்மைகளை வழங்குகிறது என்ற தவறான கருத்தைப் பரப்புகின்றன.
மனோஸ்பியரில் பயன்படுத்தப்படும் மொழி, பெண்களை மனிதர்களாகக் கருதாமல் இருப்பதற்கும், அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் என்று முத்திரை குத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
நிஜ வாழ்க்கையில் ஏற்படும் தாக்கம்
மனோஸ்பியரில் பரவும் பெண்கள் மீதான வெறுப்பு பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் மட்டுமல்லாமல், ஆண் குழந்தைகளுக்கும் தீங்கு விளைவிக்கிறது. ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடாது என்றும், எப்போதும் வலிமையானவர்களாகவும் மற்றவர்களைக் கட்டுப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் அது கற்பிக்கிறது.
கடுமையான பாலினப் பொதுமைப்படுத்தல்களை ஏற்றுக்கொள்ளும் ஆண்களிடையே ஆபத்தான நடத்தைகள், மனநலத்தைப் புறக்கணித்தல், மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பெண்களைப் பற்றிய மனோஸ்பியர் கருத்துகள் பாலியல் வன்முறையைச் சாதாரணமானதாகக் காட்டுவதுடன், பாலினச் சமத்துவத்தை நோக்கிப் பெறப்பட்ட முன்னேற்றத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
இப்போது என்ன செய்ய வேண்டும்?
மனோஸ்பியர் கருத்துகளை “இணைய நகைச்சுவைகள்” என்று புறக்கணிக்க முடியாது. அவை பாடசாலைகள், வேலைத்தளங்கள், குடும்பங்கள் மற்றும் நெருக்கமான உறவுகளுக்குள் நுழைந்து, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைச் சாதாரணமான ஒன்றாக மாற்றுகின்றன. எனவே, பெற்றோர்கள் குழந்தைகள் பார்க்கும் உள்ளடக்கங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுவதும், பெண்களை வெறுக்கும் கருத்துகளைக் கேள்விக்குட்படுத்துவதும், சமத்துவம், மரியாதை மற்றும் சம்மதத்தின் அடிப்படையிலான உறவுகள் குறித்து அவர்களுக்குக் கற்பிப்பதும் மிகவும் அவசியமாகும்.
இணையத்தில் பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் பற்றிய தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்
தவறான நம்பிக்கை: இணையம் வழியாகக் குழந்தைகளைக் குறிவைத்துப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துபவர்கள் வயது வந்த ஆண்கள் மட்டுமே.
உண்மை: இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எந்த வயதினராகவும், எந்தப் பாலினத்தைச் சேர்ந்தவர்களாகவும், எந்தப் பின்னணியைக் கொண்டவர்களாகவும் இருக்கலாம். அவர்களின் தோற்றம், வயது அல்லது சமூக நிலையை வைத்து ஒரு குற்றவாளியை அடையாளம் காண முடியாது.
தவறான நம்பிக்கை: இணையக் கணக்கில் காணப்படும் நபரே அந்தக் கணக்கைப் பயன்படுத்தும் உண்மையான நபர்.
உண்மை: இணையத்தில் இருக்கும் ஒருவர் தாம் கூறும் நபர்தானா என்பதை உறுதிப்படுத்துவது கடினம். குழந்தையின் வயதுக்கு நெருக்கமானவராகத் தோன்றும் கணக்கின் பின்னால் வேறு வயதுடைய அல்லது வேறு அடையாளத்தைக் கொண்ட ஒருவர் இருக்கலாம்.
தவறான நம்பிக்கை: “நல்லவராக” அல்லது நட்பாகப் பேசும் ஒருவரால் ஆபத்து ஏற்படாது.
உண்மை: குழந்தையின் நம்பிக்கையைப் பெறுவதற்காகக் குற்றவாளிகள் நட்பாகப் பேசவும், குழந்தைக்குப் பிடித்த விடயங்களில் ஆர்வம் காட்டவும் முடியும். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அடிக்கடி உரையாடுவதும், இணையத்தில் சந்திக்கும் நபர்களின் அடையாளத்தை எளிதில் நம்பிவிடக் கூடாது என்பதை அவர்களுக்கு விளக்குவதும் முக்கியமானதாகும்.