“நாங்கள் விளையாட்டாக சொன்னோம்’
“அதை பெரிதாக நினைக்க வேண்டாம்’
“பாடசாலையில் அப்படித்தான்”
“கண்டித்தால் அதிகமாக கேளிசெய்வார்கள்”
உங்களுக்கு இவ்வாறானதை கேட்ட அனுபவம் உள்ளதா?
வேடிக்கையாகத் தொடங்கும் விடயம் சில சமயங்களில் மிகவும் தீவிரமானதாக மாறி, ஒருவர் பாடசாலைக்கு செல்லவே பயப்படும் நிலைக்குத் தள்ளப்படலாம்.
உங்களுக்குப் பயம், சங்கூச்சம், வலி அல்லது தன்னம்பிக்கையின்மையைத் தரும் ஒரு விடயத்தை நீங்கள் சகித்துக்கொள்ள வேண்டியதில்லை. கொடுமைப்படுத்தப்படுவது உங்கள் தவறல்ல. அதைப் பற்றி யாரிடமாவது சொல்வது “புறம் பேசுவதோ” அல்லது “பலவீனமோ” அல்ல.
துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல் என்றால் என்ன?
ஒருவரை பயமுறுத்துவதற்கும், காயப்படுத்துவதற்கும், அவமானப்படுத்துவதற்கும் அல்லது அவரைத் தனிமைப்படுத்துவதற்கும் தமக்குள்ள அதிகாரத்தை அல்லது செல்வாக்கைப் பயன்படுத்துவதை துன்புறுத்தல் அல்லது கொடுமைப்படுத்துதல் எனக் கூறலாம்.
இந்த அதிகாரம் என்பது உடல் வலிமையை மட்டும் குறிக்காது. வயது, பாடசாலையில் வகிக்கும் பதவி அல்லது நிலை, சமூகத்தில் அல்லது பாடசாலையில் உள்ள பிரபலத்தன்மை, நண்பர்களின் குழுவின் ஆதரவு, அல்லது ஒருவரைப் பற்றித் தெரிந்த தனிப்பட்ட தகவல்கள் போன்றவற்றையும் அதிகாரமாகப் பயன்படுத்த முடியும்.
துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல் நடைபெறக்கூடிய இடங்கள் எவை?
- வகுப்பறையில்
- பாடசாலை விளையாட்டு மைதானத்தில்
- கழிப்பறையில்
- பாடசாலைப் பேருந்தில்
- தனியார் வகுப்புகளில்
- விளையாட்டுப் பயிற்சியின்போது
- WhatsApp குழுக்கள் அல்லது சமூக ஊடகங்களில்
- இணையவழி விளையாட்டுகளை விளையாடும்போது
துன்புறுத்தல் என்பது மீண்டும் மீண்டும் நடைபெறக்கூடியதாக இருக்கலாம். ஆனால் கடுமையான தாக்குதல், பாலியல் துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது தனிப்பட்ட புகைப்படத்தைப் பகிர்தல் போன்றவை ஒருமுறை மட்டுமே நடந்திருந்தாலும், அதைப் பற்றி உடனடியாக நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் தெரிவிப்பது மிகவும் முக்கியம்.
துன்புறுத்தல் என்பது தாக்குதல் மட்டுமல்ல!
துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதலுக்கான உதாரணங்கள்
- அடித்தல், தள்ளுதல், உதைத்தல் அல்லது வேண்டுமென்றே ஒருவரின் மீது மோதுதல்.
- உணவு, பணம் அல்லது பாடசாலைப் பொருட்களை வலுக்கட்டாயமாகப் பறித்தல்.
- பாடசாலைப் பை, புத்தகங்கள் அல்லது பிற பொருட்களை சேதப்படுத்துதல்.
- உடல் தோற்றம், உடல் எடை, உயரம், தோலின் நிறம், பற்கள் அல்லது குரல் குறித்து கேலி செய்தல் அல்லது அவமதிக்கும் பெயர்களால் அழைத்தல்.
- மாற்றுத்திறன், மதம், இனம், மொழி அல்லது குடும்பச் சூழ்நிலை காரணமாக அவமதித்தல்.
- “பெண்ணைப் போல இருக்கிறாய்” அல்லது “நீ ஆணே இல்லை” போன்ற வார்த்தைகளைக் கூறி அவமானப்படுத்துதல்.
- மார்பகங்கள், மாதவிடாய் அல்லது பருவமடைதலின்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கேலி செய்தல்.
- ஒருவர் விரும்பாத வகையில் அவரைத் தொடுதல்.
- பாலியல் சார்ந்த கருத்துகள், கேலிகள் அல்லது கேள்விகளை முன்வைத்தல்.
- வதந்திகளைப் பரப்புதல்.
- வேண்டுமென்றே நண்பர்களிடமிருந்து ஒருவரைத் தனிமைப்படுத்துதல்.
- ஒரு இரகசியத்தை வெளிப்படுத்துவதாக அச்சுறுத்துதல்.
- அவமதிக்கும் பதிவுகள் (posts), கருத்துகள் (comments) அல்லது மீம்ஸ்களை (memes) வெளியிடுதல்.
- ஒருவரின் புகைப்படத்தை மாற்றியமைத்து அல்லது திருத்தி பகிர்தல்.
- ஒருவரின் பெயரில் போலிக் கணக்கை உருவாக்குதல்.
- கடவுச்சொல்லைக் கேட்பது அல்லது ஒருவரின் கணக்கிற்குள் அவருடைய அனுமதியின்றி நுழைதல்.
- தனிப்பட்ட செய்திகள், புகைப்படங்கள் அல்லது காணொளிகளை ஒருவரின் அனுமதியின்றிப் பகிர்தல்.
இவ்வாறான துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல்களை உங்கள் வயதுடைய ஒருவர் மட்டுமே செய்வார் என்பதில்லை. உங்களை விட வயதில் மூத்த மாணவர், மாணவர் தலைவர், ஆசிரியர், பயிற்றுநர் அல்லது வேறு எந்த வயது வந்தவராலும் துன்புறுத்தல் அல்லது கொடுமைப்படுத்துதல் இடம்பெறலாம்.
அது உண்மையிலேயே ஒரு வேடிக்கையா?
ஒரு நல்ல வேடிக்கையாக இருந்தால், அதில் ஈடுபடும் அனைவரும் மகிழ்ச்சியாகச் சிரிப்பார்கள். ஒருவர் “வேண்டாம்” என்று கூறினால், அந்தச் செயலை உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஆனால்,
- உங்களுக்கு வலிக்கிறது என்றால்,
- உங்களுக்கு பயம் அல்லது அவமானம் ஏற்படுகிறது என்றால்,
- நீங்கள் “வேண்டாம்” என்று கூறிய பிறகும் தொடர்ந்து செய்கிறார்கள் என்றால்,
- வகுப்பிற்கோ, பாடசாலைக்கோ அல்லது இணையவழிச் செயல்பாடுகளிலோ கலந்துகொள்ள உங்களுக்கு பயமாக இருந்தால்,
அது சாதாரணமான வேடிக்கை அல்ல.
“நாங்கள் வேடிக்கைக்காகத்தான் செய்தோம்” என்று கூறுவதால், அதனால் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு அல்லது மனவேதனை நீங்கிவிடாது.
யாராவது உங்களைத் துன்புறுத்தினால் அல்லது கொடுமைப்படுத்தினால் என்ன செய்வது?
முதலில், உங்கள் பாதுகாப்பைப் பற்றி சிந்தியுங்கள்.
அவ்வாறு கூறுவது பாதுகாப்பானதாக இருந்தால், தெளிவாக இவ்வாறு கூறுங்கள்:
“அதை நிறுத்துங்கள். எனக்கு அது பிடிக்கவில்லை.”
பின்னர், அந்த இடத்திலிருந்து விலகி, நம்பிக்கைக்குரிய ஒருவர் இருக்கும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள்.
உங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை என்றால், அந்த நபரைத் தனியாக எதிர்கொள்ளவோ அல்லது அவரைத் திருப்பித் தாக்கவோ முயற்சி செய்யாதீர்கள்.
முடிந்தவரை விரைவாக நம்பிக்கைக்குரிய ஒரு பெரியவரிடம் இதைப் பற்றிக் கூறுங்கள். அவர்:
- அம்மா, அப்பா அல்லது பாதுகாவலராக இருக்கலாம்.
- நீங்கள் நம்பும் உறவினராக இருக்கலாம்.
- வகுப்பிற்குப் பொறுப்பான ஆசிரியராக இருக்கலாம்.
- நீங்கள் நம்பும் வேறு ஓர் ஆசிரியராக இருக்கலாம்.
- பாடசாலை ஆலோசகராக இருக்கலாம்.
- பிரிவுத் தலைவராக இருக்கலாம்.
- அதிபர் அல்லது துணை அதிபராக இருக்கலாம்.
நீங்கள் கூறியதை அவர்கள் நம்பவில்லை என்றாலோ அல்லது துன்புறுத்தலை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாலோ, வேறு நம்பிக்கைக்குரிய ஒரு பெரியவரிடம் தொடர்ந்து தெரிவியுங்கள். உதவி கிடைக்கும் வரை பேசுவதை நிறுத்த வேண்டாம்.
உதவி கிடைக்கும் வரை தொடர்ந்து தெரிவியுங்கள் – நடந்தவற்றைப் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள்
நிகழ்வு நடந்த தேதி மற்றும் நேரம்
நிகழ்வு நடந்த இடம்
செய்யப்பட்ட அல்லது கூறப்பட்ட விடயம்
சம்பந்தப்பட்டவர்கள் யார்?
அதைப் பார்த்தவர்கள் யார்?
இது குறித்து நீங்கள் யாரிடம் தெரிவித்தீர்கள்?
அந்த நபர் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
இணையவழித் துன்புறுத்தல் என்றால், screenshot-கள், பயனர்பெயர்கள் (usernames), இணைப்புகள் (links) மற்றும் செய்திகளை (messages) அழிக்காமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை சமூக ஊடகங்களில் மீண்டும் பகிர வேண்டாம்.
பாடசாலைக்கு புகார் செய்வது எவ்வாறு?
01.பாடசாலையில் உங்களுக்கு நம்பிக்கையான ஒருவரிடம் சொல்லுங்கள்.
உங்கள் வகுப்பு ஆசிரியர், பாடசாலை ஆலோசகர், துறைத் தலைவர்களிடம் என்ன நடந்தது என்று சொல்லுங்கள்.
அவர்களிடம் தனியாகப் பேச உங்களுக்குப் பயமாக இருந்தால், ஒரு நண்பர், சகோதரர்கள் அல்லது நம்பகமான பெரியவருடன் செல்லுங்கள்.
நீங்கள் இதுபோன்று கூறலாம்:
“நான் பாடசாலையில் துன்புறுத்தல்க்கு உட்பட்டேன். அது எனக்குப் பயமாகவும் பாதுகாப்பற்றதாகவும் உணர வைக்கிறது. இதை நிறுத்த எனக்கு உதவி தேவை.”
02.ஆசிரியர் உங்களை துன்புறுத்தினால்,
நீங்கள் ஆசிரியரைத் தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை.
உங்கள் அம்மா, அப்பா, பாதுகாவலர் அல்லது நீங்கள் நம்பும் வேறு ஒரு பெரியவரிடம் சொல்லுங்கள். அவர்களுடன் சேர்ந்து, தலைமையாசிரியரிடமோ அல்லது ஆசிரியரை விட உயர் பதவியில் உள்ள ஒரு அதிகாரியிடமோ புகார் செய்யுங்கள்.
தலைமையாரே துன்புறுத்தினால், நீங்கள் நம்பும் ஒரு பெரியவரின் உதவியுடன், வலயக் கல்வி அலுவலகத்திற்கோ, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கோ அல்லது காவல்துறைக்கோ புகார் அளியுங்கள்.
03.எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கவும்.
நீங்கள் தனியாகக் கடிதம் எழுத வேண்டியதில்லை. நம்பகமான ஒரு பெரியவரிடம் உதவி கேளுங்கள்.
கடிதத்தில் பின்வரும் தகவல்களைச் சேர்க்கவும்:
உங்கள் பெயர் மற்றும் வகுப்பு
என்ன நடந்தது
திகதி மற்றும் இடம்
சம்பந்தப்பட்ட நபர்கள்
உங்களிடம் உள்ள சான்றுகள்
தற்போது நீங்கள் உணரும் ஆபத்து
பாடசாலையிடமிருந்து உங்களுக்குத் தேவைப்படும் உதவி
கடிதம் அல்லது மின்னஞ்சலின் ஒரு நகலை வைத்துக்கொள்ளுங்கள்.
புகார் அளித்ததற்காக உங்களைத் தண்டிப்பதோ, அவமானப்படுத்துவதோ, அல்லது வகுப்பிலிருந்து நீக்குவதோ தவறு. புகார் அளித்த பிறகு யாராவது உங்களை மிரட்டினால், உடனடியாகப் அதைபற்றி புகார் அளியுங்கள்.
04.பாடசாலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால்
நம்பகமான ஒரு பெரியவரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அலுவலகத்திலோ அல்லது மாகாணக் கல்வித் துறையிலோ புகார் அளிக்கவும்.
கல்வி அமைச்சகத்தின் இணையவழிப் புகார் படிவத்தின் மூலமாகவும் நீங்கள் புகாரைச் சமர்ப்பிக்கலாம்:
கல்வி அமைச்சகத்திடம் புகாரைச் சமர்ப்பிக்கவும்
பாடசாலைக்கு அனுப்பப்பட்ட முந்தைய கடிதங்கள், ஸ்கிரீன்ஷாட்கள் (screenshots) மற்றும் பதில்களைப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.
எப்போது உடனடியாக உதவி பெற வேண்டும்?
சில சம்பவங்களில் பாடசாலை நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை
பின்வரும் சம்பவங்களில் ஏதேனும் ஒன்று நடந்தால், உடனடியாக நம்பிக்கைக்குரிய ஒரு பெரியவரிடம் தெரிவிக்கவும்:
- கடுமையான தாக்குதல் அல்லது அடித்தல்
- பாலியல் தொல்லை அல்லது பாலியல் துஷ்பிரயோகம்
- உங்களுக்கு விருப்பமில்லாத வகையில் உங்கள் உடலைத் தொடுதல்
- ஆயுதத்தைக் காட்டி அல்லது வேறு விதத்தில் அச்சுறுத்துதல்
- உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கோ தீங்கு விளைவிப்பதாக மிரட்டுதல்
- நிர்வாணமான அல்லது பாலியல் தன்மையுடைய புகைப்படங்கள்/காணொளிகளைக் கேட்பது
- அத்தகைய புகைப்படங்கள்/காணொளிகளைப் பகிர்வது அல்லது பகிரப்போவதாக அச்சுறுத்துவது
- பாடசாலையிலிருந்தோ வீட்டிலிருந்தோ தப்பிச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு பயம் ஏற்படுதல்
- உங்களையே காயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுதல்
உதவி பெறக்கூடிய இடங்கள்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை – 1929
எந்தவொரு தொலைபேசி வலையமைப்பிலிருந்தும் இலவசமாக அழைக்கலாம். சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேச முடியும். இந்தச் சேவை 24 மணி நேரமும் செயல்படுகிறது.
பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பணியகம் – 109
அவசரகால பொலிஸ் உதவி – 119
இலங்கை CERT – 101
இணையம் தொடர்பான சம்பவங்களைப் புகாரளிக்கவும் உதவி பெறவும் பயன்படுத்தலாம்.
கணக்கு ஹேக் செய்யப்படுதல், போலியான கணக்கு உருவாக்கப்படுதல் அல்லது பிற இணையவழி பிரச்சினைகள் தொடர்பாகவும் உதவி பெறலாம்.
1929 அல்லது பொலிஸைத் தொடர்புகொள்ள பாடசாலையின் அனுமதி தேவையில்லை. நீங்களே அழைக்கலாம். அல்லது நம்பிக்கைக்குரிய ஒரு பெரியவரின் உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் நண்பர் ஒருவருக்கு துன்புறுத்தல் நடப்பதை நீங்கள் கண்டால்
- துன்புறுத்தலுக்கு உள்ளாகும் நண்பரை அந்த இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்லுங்கள்.
- “உனக்கு நடந்தது தவறான ஒன்று” என்று அவரிடம் கூறுங்கள்.
- அவர் கூறுவதை கவனமாகக் கேளுங்கள்.
- நம்பிக்கைக்குரிய ஒரு பெரியவரிடம் தெரிவிக்கவும்.
- அது இணையத்தில் வெளியிடப்பட்ட பதிவாக இருந்தால், அதனைப் புகாரளிக்கவும்.
- சம்பந்தப்பட்ட ஆதாரங்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கவும்.
- அந்த நண்பரின் அனுமதியின்றி அவருடைய சம்பவத்தை மற்ற நண்பர்களிடையே பரப்ப வேண்டாம்.
ஆனால் உங்கள் நண்பர் ஆபத்தில் இருந்தால், யாராவது அவரை அச்சுறுத்தினால் அல்லது அவர் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசினால், அதை இரகசியமாக வைத்திருக்க வேண்டாம். உடனடியாக நம்பிக்கைக்குரிய ஒரு பெரியவரிடம் அல்லது உரிய உதவி சேவையிடம் தெரிவிக்கவும்.
நீங்களே மற்றவர்களைத் துன்புறுத்தும் அல்லது கொடுமைப்படுத்தும் குழுவில் இருந்தால்?
சில நேரங்களில் நண்பர்களுடன் இணைந்து இருப்பதற்காக, பிரபலமாக இருப்பதற்காக அல்லது தாமும் துன்புறுத்தலுக்கு உள்ளாகிவிடுவோம் என்ற பயத்தினால், ஒருவர் மற்றொருவரை கேலி செய்வதிலோ காயப்படுத்துவதிலோ இணைந்து கொள்ளலாம்.
நீங்கள் அவ்வாறு செய்திருந்தால், “இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது” என்று நினைக்க வேண்டாம்.
- அதை நிறுத்துங்கள்.
- தீங்கு விளைவிக்கும் பதிவு அல்லது கருத்தாக இருந்தால், அதனை நீக்குங்கள்.
- அதனை மேலும் பகிர வேண்டாம் என்று உங்கள் நண்பர்களிடம் கூறுங்கள்.
- நீங்கள் செய்த செயலுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்.
- பாதுகாப்பானதும் பொருத்தமானதுமான சூழலில் மன்னிப்புக் கேளுங்கள்.
- நிலைமையைச் சரிசெய்வதற்கு ஒரு பெரியவரின் உதவியை நாடுங்கள்.
மன்னிப்புக் கேட்பது என்பது “நான் விளையாட்டாகத்தான் செய்தேன்” என்று காரணம் கூறுவது அல்ல. நீங்கள் செய்த செயல் மற்றவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்றுக்கொள்வதாகும்.
நினைவில் கொள்ளுங்கள்
நீங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகுவது உங்கள் தவறு அல்ல.
உங்கள் உடல், ஆடை, தோலின் நிறம், குரல், நடத்தை, நண்பர்கள், குடும்பம் அல்லது இணையவழி வாழ்க்கை ஆகியவற்றில் எதுவாக இருந்தாலும், அதன் காரணமாக யாருக்கும் உங்களைத் துன்புறுத்தும் உரிமை கிடையாது.
முதலில் நீங்கள் தெரிவித்த நபர் உதவி செய்யவில்லை என்றால், மற்றொரு நம்பிக்கைக்குரிய நபரிடம் தொடர்ந்து தெரிவிக்கவும்.
பயமின்றி பாடசாலைக்குச் செல்லவும், கற்கவும், விளையாடவும், நண்பர்களுடன் இருக்கவும் உங்களுக்கு உரிமை உள்ளது.