பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளைப் பராமரிப்பவர்களுக்கான வழிகாட்டி
பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து சிறு வயதிலிருந்தே பிள்ளைகள் பல்வேறு கருத்துகளைக் கேட்டு வளர்கிறார்கள். இந்தக் கருத்துகள் அவர்களின் விருப்பங்கள், தன்னம்பிக்கை, உறவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
நியாயமற்ற எதிர்பார்ப்புகளைக் கேள்விக்குட்படுத்தவும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகள், பொறுப்புகள் மற்றும் மரியாதை கிடைக்கும் ஒரு குடும்பச் சூழலை உருவாக்கவும் பெற்றோர்கள் உதவ முடியும்.
1. இது பற்றிப் பேசுவது ஏன் முக்கியம்?
“ஆண் பிள்ளைகள் அழக்கூடாது” அல்லது “சமைப்பது பெண் பிள்ளைகளின் வேலை” போன்ற கூற்றுகள் சாதாரணமானவை போல் தோன்றலாம். ஆனால், இவை பிள்ளைகள் என்ன செய்யலாம் அல்லது தங்களுடைய உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்தலாம் என்பதை வரையறுக்கக்கூடும்.
சமூகப் பாலினம் என்பது பல்வேறு பாலின அடையாளங்களைக் கொண்டவர்களிடமிருந்து சமூகம் எதிர்பார்க்கும் பாத்திரங்கள் மற்றும் நடத்தைகளைக் குறிக்கிறது. இந்த எதிர்பார்ப்புகளை நாம் சமூகத்திலிருந்து கற்றுக்கொள்கிறோம். அவை சமூகத்திற்கு சமூகம் மாறுபடுவதுடன், காலப்போக்கிலும் மாறக்கூடும். ஒருவரால் என்ன செய்ய முடியும் அல்லது எதைச் சாதிக்க முடியும் என்பதைத் தீர்மானிக்கும் நிலையான விதிகள் இவை அல்ல.
இவற்றைப் பற்றிக் கற்றுக்கொள்வதன் மூலம், பிள்ளைகள் அநீதியான நடத்தைகளை அடையாளம் காண முடியும். விருப்பங்கள், திறமைகள் மற்றும் உணர்வுகள் ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு மட்டுமே உரியவை அல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
2. உரையாடலை எவ்வாறு ஆரம்பிப்பது?
அன்றாட நிகழ்வொன்றை, விளம்பரமொன்றை அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை அடிப்படையாகக் கொண்டு உரையாடலை ஆரம்பியுங்கள்.
-
“எப்போதும் அம்மா சமைப்பதை மட்டும் காட்டுகிறார்கள் என்று நீ ஏன் நினைக்கிறாய்?”
-
“பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளும் பொருட்களைப் பழுதுபார்க்கக் கற்றுக்கொள்ள முடியுமா?”
-
“பாடசாலையில் ஓர் ஆண் பிள்ளை அழுதால் என்ன நடக்கும்?”
-
“நீ பெண் பிள்ளை அல்லது ஆண் பிள்ளை என்பதால் ஒரு விடயத்தைச் செய்ய முடியாது என்று யாராவது உன்னிடம் கூறியிருக்கிறார்களா?”
பிள்ளை கூறுவதை உடனடியாகத் திருத்த முயற்சிக்காமல், அதற்குச் செவிசாயுங்கள். அந்தக் கருத்தை எங்கிருந்து கேட்டார்கள் என்றும், அதைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் கேளுங்கள்.
நீங்கள் இவ்வாறு கூறலாம்:
“நாம் எல்லோரும் சிறு வயதிலிருந்தே பல்வேறு கருத்துகளைக் கேட்டு வளர்கிறோம். அந்தக் கருத்துகள் நியாயமானவையா என்று நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.”
3. பிள்ளைகளுக்கு விளக்க வேண்டிய முக்கியமான விடயங்கள்
உயிரியல் பாலியல் பண்புகளும் சமூகப் பாலினமும் ஒன்றல்ல
உயிரியல் பாலினம் என்பது இனப்பெருக்க உறுப்புகள், ஹார்மோன்கள் மற்றும் குரோமோசோம்கள் போன்ற உடலின் உயிரியல் பண்புகளைக் குறிக்கிறது. பொதுவாகப் பெண் அல்லது ஆண் என வகைப்படுத்தப்படும் பாலியல் பண்புகளிலிருந்து வேறுபட்ட பண்புகளுடன் சிலர் பிறக்கிறார்கள். இவை இடையிலிங்கப் பண்புகள் (Intersex variations) என அழைக்கப்படுகின்றன.
சமூகப் பாலினம் என்பது தனிநபர்களுக்கு சமூகம் ஒதுக்கும் பாத்திரங்களையும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் நடத்தைகளையும் உள்ளடக்கியது.
பாலினப் பொதுமைப்படுத்தல் (Stereotype) என்பது ஒரு முழுக் குழுவினரும் ஒரே மாதிரியானவர்கள் என்று கருதுவதாகும்.
“ஆண் பிள்ளைகள் தொழில்நுட்பத்தில் அதிக திறமைசாலிகள்” அல்லது “பெண் பிள்ளைகள் இயல்பாகவே மற்றவர்களைப் பராமரிப்பதில் திறமைசாலிகள்” என்பவை பாலினப் பொதுமைப்படுத்தல்களாகும்.
ஒவ்வொருவருடைய விருப்பங்களும் திறமைகளும் வேறுபட்டவை. வாய்ப்புகள், பயிற்சி மற்றும் ஆதரவு கிடைப்பதன் மூலம் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும்.
சமூகப் பாலினம் என்பது அதிகாரம் மற்றும் வாய்ப்புகளுடனும் தொடர்புடையது.
முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கிறது? ஊதியம் வழங்கப்படாத வேலைகளை யார் செய்கிறார்கள்? யாருடைய கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது? போன்ற விடயங்களைப் பற்றிப் பேசுங்கள்.
ஆணாதிக்கம் (Patriarchy) என்பது ஒரு சமூகத்தில் ஆண்களுக்கு அதிக அதிகாரமும் முடிவுகளை எடுக்கும் உரிமையும் வழங்கப்படும் சமூகக் கட்டமைப்பைக் குறிக்கிறது.
அநீதியான அதிகார உறவுகளைக் கேள்விக்குட்படுத்துவதன் மூலம், மேலும் சமத்துவமான உறவுகளை உருவாக்க முடியும். இது ஒவ்வொரு ஆண் பிள்ளையையும் அல்லது ஆணையும் குற்றம் சாட்டுவதாகாது.
அனைவருக்கும் உணர்வுகள் உள்ளன.
பயம், துக்கம், அன்பு மற்றும் நிச்சயமற்ற தன்மை போன்ற உணர்வுகள் அனைவருக்கும் ஏற்படலாம். தாங்கள் வலிமையானவர்கள் என்பதை நிரூபிப்பதற்காகப் பிள்ளைகள் தங்களுடைய உணர்வுகளை மறைக்க வேண்டிய அவசியமில்லை.
அனைவரும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டியவர்கள்.
ஒருவருடைய ஆடை, விருப்பங்கள் அல்லது நடத்தை ஆகியவற்றைப் பார்த்து அவருடைய அடையாளத்தையோ அல்லது அவர் யாரிடம் ஈர்ப்பு கொள்கிறார் என்பதையோ தீர்மானிக்க முடியாது.
ஒருவர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர் என்பதற்காக அவரை கேலி செய்வதோ, பாகுபாடு காட்டுவதோ கூடாது.
4. சமத்துவத்தை அன்றாடப் பழக்கமாக்கும் குடும்பத்தை உருவாக்குவோம்
வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வோம்
சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், தங்களுடைய பொருட்களைப் பராமரித்தல் மற்றும் மற்றவர்களுக்கு உதவுதல் போன்றவற்றை அனைத்துப் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். வேலைகளைப் பகிர்ந்தளிக்கும்போது வயது மற்றும் திறமைகளைக் கருத்தில் கொள்ளுங்கள். பெண் அல்லது ஆண் என்பதன் அடிப்படையில் வேலைகளைப் பிரிக்க வேண்டாம்.
பெரியவர்களும் பராமரிப்புப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். யார் உணவு தயாரிக்கிறார்கள், சந்திப்புகள் மற்றும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நாட்களை யார் நினைவில் வைத்திருக்கிறார்கள், உறவினர்களைப் பராமரிப்பது யார் போன்ற விடயங்களைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள்.
இந்தப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதை உங்களுடைய நடத்தையின் மூலம் காட்டுங்கள். பெண்களும் ஆண்களும் செய்ய வேண்டிய வேலைகள் பற்றிய கட்டுப்படுத்தும் கருத்துகளை மாற்றுவதற்கு அன்றாட நடத்தைகள் உதவக்கூடும்.
பிள்ளைகள் தங்களுடைய விருப்பங்களைக் கண்டறிய வாய்ப்பளிப்போம்
விளையாட்டு, கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைத் திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குங்கள். பிள்ளைகளின் பாலினத்தின் அடிப்படையில் அவர்களுக்குப் பொருத்தமானவற்றைத் தீர்மானிப்பதற்குப் பதிலாக, அவர்கள் எவற்றில் விருப்பம் கொண்டிருக்கிறார்கள் என்று கேளுங்கள்.
வேறுபட்ட விதிமுறைகள் உள்ளனவா என்று பார்ப்போம்
ஆண் பிள்ளைகள் ஓய்வெடுக்கும்போது, விருந்தினர்களைக் கவனிப்பதற்கு பெண் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கப்படுகிறதா? ஆண் பிள்ளைகள் மற்றவர்கள் பேசும்போது இடைமறித்துப் பேச அனுமதிக்கப்படுகிறார்கள்; ஆனால் பெண் பிள்ளைகள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறதா?
பாதுகாப்பிற்காக விதிக்கப்படும் விதிமுறைகள் வயது மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடலாம். அவற்றுக்கான காரணங்களை விளக்குங்கள். பெண் அல்லது ஆண் என்பதன் அடிப்படையிலான கருத்துகளால் தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றனவா என்பதையும் மீளாய்வு செய்யுங்கள்.
முடிவுகளை எடுக்கும்போது பிள்ளைகளின் கருத்துகளைக் கேட்போம்
பிள்ளைகளைப் பாதிக்கும் குடும்ப விடயங்களில் அவர்களுடைய கருத்துகளைக் கேளுங்கள். அச்சுறுத்துதல், அவமானப்படுத்துதல் அல்லது மற்றவர்களை அடக்கி ஆளுதல் போன்றவற்றுக்குப் பதிலாக, பெரியவர்கள் ஒருவருக்கொருவர் செவிசாய்ப்பதை உங்கள் நடத்தையின் மூலம் காட்டுங்கள்.
புண்படுத்தும் கருத்துகளுக்குச் சாந்தமாகப் பதிலளிப்போம்
உறவினர் ஒருவர், “அவை ஆண் பிள்ளைகளுக்குப் பொருத்தமானவை அல்ல” என்று கூறினால், நீங்கள் இவ்வாறு பதிலளிக்கலாம்:
“எங்கள் பிள்ளைகள் பல்வேறு திறன்களைக் கற்றுக்கொள்ளவும், தங்களுக்குப் பிடித்தவற்றைத் தேடிப் பார்க்கவும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்.”
பிள்ளைகளின் அடையாளத்திற்கும் தனியுரிமைக்கும் மதிப்பளிப்போம்
பிள்ளைகள் தங்களுடைய பாலின அடையாளம் அல்லது பாலியல் ஈர்ப்பு பற்றிய ஏதாவது விடயத்தை உங்களிடம் பகிர்ந்துகொண்டால், அவர்களுக்குச் செவிசாயுங்கள். உங்களை நம்பி அதைப் பகிர்ந்துகொண்டதற்காக நன்றி தெரிவியுங்கள்.
ஒரு குறிப்பிட்ட பெயரால் அல்லது அடையாளத்தால் தங்களை அழைத்துக்கொள்ளுமாறு அவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டாம். பிள்ளைகளின் ஒப்புதல் இல்லாமல் அவர்களுடைய தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
5. ஒன்றாகச் செய்யக்கூடிய ஒரு சிறிய செயற்பாடு
பின்வரும் செயல்களைத் தனித்தனி காகிதத் துண்டுகளில் எழுதுங்கள்:
-
உணவு தயாரித்தல்
-
ஒரு குழுவிற்குத் தலைமை தாங்குதல்
-
குழந்தையைப் பராமரித்தல்
-
மிதிவண்டியைப் பழுதுபார்த்தல்
-
நடனமாடுதல்
-
பணத்தை நிர்வகித்தல்
பின்னர் இவ்வாறு கேளுங்கள்:
“இந்த ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு யாரால் கற்றுக்கொள்ள முடியும்?”
நீங்களோ அல்லது பிள்ளைகளோ ஏதாவது ஒரு செயலை இயல்பாகவே பெண்களுக்கு அல்லது ஆண்களுக்கு மட்டுமே உரியதாகக் கருதியிருக்கிறீர்களா என்பதைப் பற்றிக் கலந்துரையாடுங்கள்.
அதன்பிறகு, வீட்டில் செய்யக்கூடிய ஒரு சிறிய மாற்றத்தைத் தேர்ந்தெடுங்கள். அனைவரும் ஒரு உணவைத் தயாரிக்கக் கற்றுக்கொள்வது அல்லது வீட்டு வேலைகளை மாறிமாறிச் செய்வது போன்றவை இத்தகைய மாற்றங்களாக இருக்கலாம்.
இறுதியாக இவ்வாறு கேளுங்கள்:
“இவை பெண்களின் வேலைகள் அல்லது ஆண்களின் வேலைகள் என்று பிரிப்பதை நிறுத்தினால், நமக்கு எத்தகைய வாய்ப்புகள் கிடைக்கும்?”
6. சிரமமான கேள்விகளுக்குப் பதிலளிப்பது எப்படி?
– பெண்கள் மற்றும் ஆண்களின் உடல்கள் வேறுபட்டவைதானே? அப்படியென்றால் அவர்கள் செய்யும் வேலைகளும் வேறுபட வேண்டாமா?
உடல்களில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் யார் சமைக்க வேண்டும், யார் தலைமை தாங்க வேண்டும், யார் அறிவியலைக் கற்கலாம் அல்லது மற்றவர்களைப் பராமரிக்கலாம் என்பதை அந்த வேறுபாடுகள் தீர்மானிப்பதில்லை.
– அழுவது பலவீனத்தின் அடையாளமா?
இல்லை. அழுவது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். உதவி கேட்பது சிரமமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள உதவுகிறது.
– ஓர் ஆண் பிள்ளை நடனத்தில் விருப்பம் கொண்டிருந்தால், அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று அர்த்தமா?
இல்லை. ஒருவர் விரும்பும் பொழுதுபோக்கின் அடிப்படையில் அவருடைய பாலியல் ஈர்ப்பு யாரிடம் உள்ளது என்பதைத் தீர்மானிக்க முடியாது.
– ஒருவர் தங்களைப் பெண் அல்லது ஆண் என்று அடையாளப்படுத்திக்கொள்ளாவிட்டால் என்ன செய்வது?
சிலர் தங்களுடைய பாலின அடையாளத்தை வேறு விதமாக விவரிக்கிறார்கள். நாம் அவர்களுக்குச் செவிசாய்க்கவும், மரியாதையுடன் நடத்தவும் முடியும்.
– எமது பாரம்பரியங்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வெவ்வேறு வேலைகள் ஒதுக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது?
எமது பாரம்பரியங்களை மதிக்கும் அதேவேளை, ஒரு பழக்கம் ஒருவருடைய தெரிவுகளைக் கட்டுப்படுத்துகிறதா அல்லது அநீதியான முறையில் நடத்துகிறதா என்பதைப் பற்றியும் கலந்துரையாடலாம்.
7. இப்படிச் சொல்ல வேண்டாம் — அதற்குப் பதிலாக இப்படிச் சொல்லுங்கள்
சொல்ல வேண்டாம்: “ஆண் பிள்ளைகள் அழக்கூடாது.”
அதற்குப் பதிலாக: “உனக்கு என்ன உணர்வு ஏற்படுகிறது என்பதை என்னிடம் சொல்லலாம்.”
சொல்ல வேண்டாம்: “அந்தப் பாடம் பெண் பிள்ளைகளுக்கு மிகவும் கடினமானது.”
அதற்குப் பதிலாக: “அதைக் கற்றுக்கொள்வதற்குத் தேவையான உதவியை நாம் தேடிக்கொள்வோம்.”
சொல்ல வேண்டாம்: “வீட்டு வேலைகள் பெண்களுக்கானவை.”
அதற்குப் பதிலாக: “எங்கள் வீட்டைப் பராமரிக்க அனைவரும் உதவ வேண்டும்.”
சொல்ல வேண்டாம்: “ஆணைப் போல நடந்துகொள்.”
அதற்குப் பதிலாக: “பொறுப்புடனும், மற்றவர்கள்மீது அக்கறையுடனும், துணிச்சலுடனும் நடந்துகொள்.”
சொல்ல வேண்டாம்: “பெண் பிள்ளைகள் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும்.”
அதற்குப் பதிலாக: “அனைவருக்கும் தங்களுடைய கருத்துகளைப் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.”
சொல்ல வேண்டாம்: “மற்றவர்கள் என்ன சொல்வார்கள்?”
அதற்குப் பதிலாக: “உனக்குப் பிடித்தவை மற்றும் உனக்கு முக்கியமானவை பற்றிப் பேசுவோம்.”
8. எப்போது, எங்கே உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்?
பிள்ளையின் பாலினம் காரணமாக கேலி செய்தல், குழுவிலிருந்து விலக்குதல் அல்லது துன்புறுத்துதல் போன்றவை இடம்பெற்றால், அதைத் தீவிரமாகக் கவனியுங்கள். நம்பிக்கைக்குரிய ஆசிரியர் அல்லது அதிபருடன் இணைந்து பிள்ளையின் பாதுகாப்பிற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானித்து, அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதையும் கண்காணியுங்கள்.
உளவியல் ரீதியான பாதிப்பு பிள்ளையின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்தால், பிள்ளையை மரியாதையுடன் நடத்தும் தகுதியான ஆலோசகர் அல்லது சுகாதார நிபுணரின் உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். அந்த உதவி பிள்ளையின் தேவைகளுக்குப் பதிலளிப்பதாக இருக்க வேண்டும். பிள்ளையின் விருப்பங்கள் அல்லது அடையாளம் காரணமாக அவரை அவமானப்படுத்தக் கூடாது.
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம், அச்சுறுத்தல் அல்லது சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு 1929 சிறுவர் உதவி அழைப்புச் சேவையை தொடர்புகொள்ளுங்கள். இந்தச் சேவை இலவசமாகவும், 24 மணி நேரமும், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலும் கிடைக்கிறது.
பிள்ளைகளுக்குக் கூற வேண்டிய முக்கியமான செய்தி:
உன்னுடைய பாலினம் காரணமாக உனக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்படக் கூடாது. நீ மரியாதையுடன் நடத்தப்பட வேண்டியவன் / நடத்தப்பட வேண்டியவள். மற்றவர்களை மதிப்பதும் உன்னுடைய பொறுப்பாகும்.